கொவிட்-19க்குப் பிந்திய உலகில் நாடு மீண்டுவரும் பயணத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஆகச் சிறந்த நான்காம் தலைமுறைத் (4ஜி) தலைவர், துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் என்று சிங்கப்பூரர்கள் பத்தில் அறுவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
குறிப்பாக, சமூகப் பிரிவினைகளைக் கையாளக்கூடிய மிகச் சிறந்த 4ஜி தலைவரை சிங்கப்பூர் அரசாங்கம் கொண்டுள்ளதாக 60% சிங்கப்பூரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மற்ற நாடுகளுடன் சிங்கப்பூர் கொண்டுள்ள உறவுகளைக் கையாளும் தகுதி அவருக்கு உண்டு என்று 59% சிங்கப்பூரர்கள் கூறியுள்ளனர். கொவிட்-19க்குப் பிந்திய நிலையில் சிங்கப்பூர் மீண்டுவருவதைக் கையாளக்கூடிய மிகச் சிறந்த தலைவர் லாரன்ஸ் வோங் என்று 57% சிங்கப்பூரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கல்வித்தகுதி அதிகமுள்ள சிங்கப்பூரர்கள் மத்தியில் திரு வோங்குக்குக் கூடுதல் ஆதரவு இருப்பதையும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
சிங்கப்பூரின் தலைமைத்துவம், இங்குள்ள சமூகம் ஆகியவற்றில் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கை குறித்து 1,000 பேரிடம் கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) இக்கேள்விகளைக் கேட்டறிந்தது. ஏப்ரல் முதல் மே வரை ஏழு வாரங்களாக ஆய்வு நடத்தப்பட்டது.
கொள்ளைநோயிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், நாடு எதை நோக்கிச் செல்கிறது போன்றவற்றை ஆராயும் பெரும் ஆய்வின் ஓர் அங்கமே இந்த 4ஜி தலைமைத்துவம் குறித்த ஆய்வு என்று குறிப்பிடப்பட்டது.
'4ஜி' தலைவர்மீது நம்பிக்கை
சிங்கப்பூரின் 4ஜி தலைவர் யார் என்ற கேள்வியை சிங்கப்பூரர்கள் பலர் முணுமுணுத்துவந்த காலகட்டத்தில்தான் கொள்ளைநோய் ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் சுட்டினர்.
நிதி அமைச்சராக இருந்து பின்னர் துணைப் பிரதமராகவும் ஆன திரு வோங், மக்கள் செயல் கட்சியின் 4ஜி குழுவுக்குத் தலைவராகத் தேர்ந்தடுக்கப்படுவதாக பிரதமர் லீ சியன் லூங் ஏப்ரல் மாதம் அறிவித்தார்.
கொள்ளைநோயை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் தலைவர்களுள் ஒருவராக திரு வோங் ஏற்கெனவே முக்கிய 4ஜி பணியில் இருந்து வந்ததையும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.
இந்த அறிவிப்பை அடுத்து சிங்கப்பூர் அரசாங்கத்திற்குத் தலைசிறந்த 4ஜி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதன் தொடர்பில் தங்களின் நம்பிக்கை அளவு என்ன என்று ஆய்வில் பங்கேற்றோரிடம் கேட்கப்பட்டது.
அதிகக் கல்வித்தகுதி
உள்ளவருக்கு அதிக நம்பிக்கை
உயர்நிலைக்குப் பிந்திய கல்வித் தகுதி உள்ளவர்களுடனும் அதற்குக் குறைவான கல்வித்தகுதி உள்ளவர்களுடனும் ஒப்பிடுகையில் பட்டதாரிகள் அல்லது மேற்படிப்பு படித்தோரிடம் காணப்பட்ட நம்பிக்கை கூடுதலாக 60% என்றிருந்தது.
பொதுவாக அதிகக் கல்வித்தகுதி உள்ளவர்களுக்கு அரசாங்கக் கொள்கைகள் தொடர்பில் நம்பிக்கை அதிகம் இருக்காது. ஆனால் இந்த ஆய்வில் அப்படி இல்லை என்று கூறப்பட்டது.
அதனால் இக்குறிப்பிட்ட பிரிவினரிடையே எழுந்த கவலைகளையும் அக்கறைகளையும் கையாள்வதில் துணைப் பிரதமர் வோங் ஓரளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கொள்ளைநோயைக்
கையாண்டதில் நம்பிக்கை
கொள்ளைநோயை அரசாங்கம் கையாண்ட விதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், துணைப் பிரதமர் வோங்கின் தலைமைத்துவத்திலும் அதிக நம்பிக்கை கொண்டதாக ஆய்வு கண்டறிந்தது. 83 விழுக்காட்டினர் இவ்வாறு ஆய்வின்வழி தெரிவித்திருந்தனர்.
பொருள், சேவை வரியின் அதிகரிப்பு தொடர்பில் அவ்வளவாக கவலை இல்லை எனக் கூறிய மூன்றில் இருவருக்கு, அரசாங்கம் ஆகச் சிறந்த 4ஜி தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளதில் கூடுதல் நம்பிக்கை இருந்தது.
மேம்பட்ட மனநலமுடையவர்கள் மத்தியில் கூடுதல் நம்பிக்கை
இனிவரும் சுகாதார நெருக்கடிகளைக் கையாள்வதில் சிங்கப்பூரின் தயார்நிலை எவ்வாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது மேம்பட்ட மனநலத்துடன் இருப்பவர்கள், வேலைச் சந்தை குறித்து நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் ஆகியோரிடையே நம்பிக்கை அதிகமாகவே இருந்ததென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அடுத்த கொள்ளைநோய்க்கு சிங்கப்பூர் மேலும் தயாராக இருக்கும் என்று மேம்பட்ட மனநலனுடையவர்கள் சுமார் 75 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

