அருணா கந்தசாமி
தன் தாயாரின் தமிழ்ச் சிறுகதைகளை வாசித்து வளர்ந்ததால் தமிழ்மொழி மீது ஆர்வம் ஏற்பட்டதாக 25 வயது அஞ்சனா சங்கர் கூறினார். இவர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கடந்த இரு தினங்களாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழ்மொழிக் கற்பித்தல் துறையில் தனது பட்டயத்தைப் பெற்றார்.
சிறு வயதிலிருந்தே கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு முதல் பரிசையும் வென்றுள்ள இவர், தனது தமிழ் ஆர்வத்திற்கு தனது வீட்டுச் சூழல் வித்திட்டதாகப் பகிர்ந்துகொண்டார்.
பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழ்மொழி சார்ந்த துறையில் சேர எண்ணினார்.
ஆனால் அப்போது தமிழ்மொழிப் பாடங்கள் இல்லாத காரணத்தால் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கணக்கியல் துறையில் சேர்ந்தார்.
கற்பித்தல் துறை, மாணவர்களுடன் உறவாடும் சூழல் ஆகியவற்றை விரும்பிய அஞ்சனா, பின்னர் தேசிய கல்விக் கழகத்தில் தமிழ்மொழி சார்ந்த பட்டயக்கல்வியை மேற்கொண்டார்.
வீட்டில் மாணவர்கள் தமிழ் பேசும் பழக்கத்தை ஊக்குவிக்கவேண்டும் என்பதை உணர்ந்த அவர், இந்த குறிக்கோளை அடைய மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகத் தொழில்நுட்பத்தின் உதவிகொண்டு புத்தாக்க முறையில் பாடங்களைத் திட்டமிட தான் முயற்சி எடுப்பதாகக் கூறினார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வர்த்தக நிர்வாகத் துறையில் தனது இளங்கலைப் பட்டத்தையும் தேசிய கல்விக் கழகத்தில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்டப்படிப்புக்குப் பிந்திய பட்டயத்தையும் ரிவினேஷ் கண்ணையா, 28, பெற்றுள்ளார்.
தொடக்கப்பள்ளி காலம் முதல் விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ள ரிவினேஷ், காற்பந்து, ஹாக்கி, தரைப்பந்து, செப்பாக் தக்ரா, நீர்ப்பந்து எனப் பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார். பல்கலைக்கழக விளையாட்டுக் குழுக்களிலும் விளையாடிஉள்ளார்.
"நான் என் நண்பர்களோடு விளையாடும்போது அவர்கள் எவ்வாறு தங்களின் திறன்களை மேம்படுத்தலாம் என்று ஆலோசனை கூறுவேன். என் ஆலோசனைகளைப் பின்பற்றி அவர்கள் வெற்றிபெறும்போது எனக்கும் அது மனநிறைவை அளிக்கும். இதையே என் முழுநேரப் பணியாக்கும் எண்ணம் தோன்றவே இரண்டாவது பட்டப்படிப்பாக உடற்பயிற்சிக் கல்வித் துறையில் சேர்ந்தேன்," என்றார் ரிவினேஷ்.
தனது பல்கலைக்கழக நாள்களில் தன்னைவிட இளைய மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சியாளராக இருந்தது, அவர்களைப் போட்டிகளுக்காக தயார்படுத்தியது போன்றவை தனக்கு மறக்க முடியாத அனுபவங்களாக இருந்த தாகவும் அவர் பகிர்ந்துகொண்டார். வர்த்தக நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றாலும் ஆசிரியராகப் பணிபுரியவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
மூன்று அங்கங்களாக நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 843 மாணவர்கள் தங்களின் பட்டயக் கல்வி மற்றும் பட்டப் படிப்புக்கான சான்றிதழ்களைப் பெற்றனர்.

