வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மற்றும் தனியார் கூட்டுரிமை வீடுகளின் வாடகை, கடந்த மாதமும் புதிய உச்சத்தைத் தொட்டது. இந்நிலையில் 24வது மாதமாக வீவக வீட்டு வாடகையும் 18வது மாதமாக தனியார் கூட்டுரிமை வீட்டு வாடகையும் தொடர்ந்து ஏற்றம் கண்டன.
இதற்கிடையே, முதிர்ச்சியடைந்த, முதிர்ச்சியடையா வட்டாரங்கள் இரண்டிலும் வீடுகளின் வாடகை அதிகரித்துள்ளதாக எஸ்ஆர்எக்ஸ் மற்றும் 99.co சொத்து நிறுவன இணையவாசல்களின் முதற்கட்டப் புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
இருப்பினும், மே மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மே மாதத்தில் 1,516 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன என்றும் கடந்த மாதம் அந்த எண்ணிக்கை 0.8% குறைந்து 1,395 என்றானது என்றும் அறியப்படுகிறது.
இந்நிலையில் 4,175 தனியார் கூட்டுரிமை வீடுகள் கடந்த மாதம் வாடகைக்கு விடப்பட்டதாகவும் மே மாதத்தின் 3,989 வாடகை வீட்டு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 4.7% அதிகரிப்பு உள்ளது.
இத்தகைய வலுவான தேவை இருக்கும் நிலையில் தொடர்ந்து ஆண்டின் இரண்டாவது பாதியிலும் வாடகை ஏற்றம் காணும் என்று எதிர்பார்க்கலாம் என்கின்றனர் சொத்துச் சந்தை கவனிப்பாளர்கள்.
நம் எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் வெளிநாட்டினர், நிரந்தரவாசிகள், அனைத்துலக மாணவர்கள் ஆகியோர் திரும்பியுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு காணப்படலாம் என்று கூறப்படுகிறது.

