சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஏற்பட்ட வேலையிட மரணங்களுக்கு உயரத்திலிருந்து விழுந்தது முதன்மை காரணமாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாண்டு இதுவரை 29 பேர் வேலையிடங்களில் இறந்தனர். அவர்களில் ஏழு பேர் உயரத்திலிருந்து விழுந்து உயிர் இழந்தனர்.
இவ்வாண்டு வேலையிடங்களில் 11 பேர் விழுந்ததால் மாண்டனர்.
அவர்களில் உயரத்திலிருந்து விழுந்து இறந்த ஏழு பேரும் அடங்குவர். மேலும் இருவர் கப்பல்களில் வேலை செய்துகொண்டிருந்தபோது கடலில் விழுந்தனர்.
ஒருவர் வாகனத்திலிருந்து வெளியேறியபோது விழுந்து இறந்தார். மற்றுமொருவர் வேலையிடத்தில் தடுக்கி விழுந்து மாண்டார்.
உயரத்திலிருந்து விழுந்ததைத் தவிர, வாகன விபத்துகளும் கருவிகள் செயலிழந்ததும் கட்டடங்கள் குலைந்ததும் வேலையிட மரணங்களுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்பட்டன.
நேற்று நடைபெற்ற வேலையிட பாதுகாப்புக் கருத்தரங்கில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.
வேலையிட விபத்துகளுக்கு பெரும்பாலும் மனிதத் தவறுதான் காரணமாக உள்ளதை விசாரணைகள் காட்டியபோதும், யார் மீதும் பழிபோடுவதில் பயனில்லை என்று மனிதவள அமைச்சின் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த கோ சின் கியோங் கூறினார். விசாரணை, சோதனை நிபுணர் பிரிவின் துணை இயக்குநராக அவர் பொறுப்பு வகிக்கிறார்.
பொறியியல், தொழில்நுட்பம், பாதுகாப்பு சார்ந்த வடிவமைப்பு ஆகியவற்றின் மூலம் வேலையிட ஆபத்துகளை நீக்க வழிகள் தேட வேண்டும் என்றார் திரு கோ.
டார்கெட் ஸீரோ ஃபோல்ஸ் எனும் அந்த ஒரு நாள் கருத்தரங்குக்கு வேலையிடப் பாதுகாப்பு மன்றம் ஏற்பாடு செய்தது. அதில் வேலையிடப் பாதுகாப்பு அதிகாரிகள், நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளிட்ட 800 பேர் கலந்துகொண்டனர்.
வலுவில்லாத தரைகள், ஏணி கள், கூரைகள் உள்ளிட்ட உயரமான இடங்களில் வேலை செய்யும் போது கடைப்பிடிக்கும் சிறந்த நடைமுறைகளை தொழில்துறை நிபுணர்கள் பகிர்ந்துகொண்டனர். வேலையிடத்தில் மின்கம்பிகளை கட்டிவைக்காமல் அப்படியே வைப்பதால்கூட விபத்துகள் நிகழலாம் என்று திரு கோ சுட்டிக்காட்டினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மூத்த மனிதவள அமைச்சர் ஸாக்கி முகம்மது, வேலையிடப் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் புறக்கணிக்கக்கூடாது என்பதைக் கடந்த சில மாதங்களின் துயரச்சம்பவங்கள் காட்டுவதாகக் கூறினார். வேலையிட விபத்துகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் அவர் விவரித்தார்.

