போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின்பேரில் அதிகாரிகள் தன்னைக் கைது செய்தபோது அவர்களை மிளகுத் தெளிப்பானால் ஓர் ஆடவர் தாக்கினார். பிடோக் நார்த் அவென்யூ மூன்று அருகே அந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடந்தது.
அந்த 30 வயது சிங்கப்பூர் ஆடவர் மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளுடன் மல்லுக்கட்டியதை அடுத்து, அதிகாரிகள் அவரை வலிந்து தடுத்து வைக்க வேண்டியிருந்தது. மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு அந்தச் சம்பவம் குறித்து நேற்று தெரிவித்தது.
விரல்மூட்டில் பிடித்து தாக்கும் நக்கல்டஸ்ட்டர் எனப்படும் ஆயுதத்தையும் சிறிய கரம்பிட் கத்தியையும் ஆடவர் வைத்திருந்தார்.
ஆடவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம். அந்தச் சம்பவத்தில் மொத்தம் 141 கிராம் எடையுள்ள கஞ்சா பிடிபட்டது. அவர் தன்னிடம் 22 கிராம் கஞ்சாவை வைத்திருந்தார்.
சிக்லாப் ரோடு அருகே உள்ள தனியார் வீட்டில் 119 கிராம் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. 15 கிராம் கஞ்சாவுக்கு மேல் கடத்தியதாக குற்றம் நிரூபிக்கப்படுவர்களுக்கு கட்டாயம் மரண தண்டனை விதிக்கப்படும்.
ஆடவரிடமிருந்து 181 கிராம் ஐஸ் போதைப் பொருள், 11 எக்ஸ்டசி மாத்திரைகள், 21 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவையும் பிடிபட்டன. ஈசூன் அவென்யூ 11ல் உள்ள மற்றோர் இடத்தில் அவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த போதைப் பொருள்களின் சந்தை மதிப்பு $47,000 ஆகும்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவையும் ஐஸ்ஸையும் 170 போதைப் புழங்கி கள் ஒரு வாரத்துக்கு பயன்படுத்தி இருக்க முடியும் என்று மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்தது.

