சிங்கப்பூருக்கு நேற்று சவூதி அரேபியா விமானம் வழி வந்திறங்கிய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே தமது அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார். சிங்கப்பூரிலிருந்து மின்னஞ்சல் வழி அவர் தமது பதவி விலகலை இலங்கை அரசுக்கு அனுப்பி உள்ளதாக அறியப்படுகிறது.
திரு கோத்தபாயவின் சிங்கப்பூர் வருகை குறித்து ஊடகங்களின் கேள்விகளுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் பதிலளித்தார். சிங்கப்பூருக்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டுள்ள திரு கோத்தபாயவுக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டு உள்ளதை அப்பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
"அவர் (திரு கோத்தபாய) இங்கு அடைக்கலம் நாடவும் இல்லை, அவருக்கு அடைக்கலம் வழங்கப்படவும் இல்லை. சிங்கப்பூர் பொதுவாக அடைக்கலத்திற்கான கோரிக்கைகளை ஏற்பதில்லை," என்று அப்பேச்சாளர் விவரித்தார். திரு கோத்தபாய, சமூக வருகை அனுமதியின்கீழ் இங்கு வந்திருப்பதாக சிங்கப்பூர் காவல்துறை வெளியிட்ட அறிக்கை கூறியது. "பொதுமக்கள், சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர்வாசிகள், வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், சமூக வருகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் உள்ளூர் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்குமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
"சட்டவிரோதமாகக் கருதப்படும் ஒன்றுகூடல்களில் பங்கேற்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்," என்று காவல்துறை எச்சரித்தது.
திரு கோத்தபாய இருந்த விமானம் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், இரவு 7.30 மணிக்கெல்லாம் 12க்கும் மேற்பட்ட செய்தியாளர்களும் காணொளிப் பதிவாளர்களும் விஐபி காம்பிளக்ஸ் நுழைவாயிலுக்கு வெளியே திரண்டனர்.
சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க இருந்த சாங்கி விமான நிலையம் முனையம் 3ல் உள்ள வருகையாளர் பகுதியில் தம் கணவருடன் காத்திருந்தார் இலங்கையரான திருவாட்டி ஃபாத்திமா.
சிங்கப்பூர் நிரந்தரவாசிகளான அத்தம்பதி, இரவு 8 மணிக்குப் புறப்பட்ட விமானம் ஒன்றில் தங்கள் மகனை அனுப்பிவைக்க விமான நிலையத்திற்கு வந்தனர். அதோடு, திரு கோத்தபாயவைக் காண அவர்கள் முடிவெடுத்தனர்.
"இலங்கையில் நிலவரம் படுமோசமாக உள்ளது. மக்கள் அவதியுறுவதைக் கண்டு நாங்கள் மிகுந்த வேதனை அடைந்தோம். அந்த வகையில் சிங்கப்பூரில் தங்க நாங்கள் கொடுத்து வைத்திருக்கிறோம்," என்றார் இல்லத்தரசியான திருவாட்டி ஃபாத்திமா.
நேற்று இரவு 8 மணிக்குப் பிறகு, வெள்ளை நிற பிஎம்டபிள்யூ, கறுப்பு நிற மெர்சிடிஸ் விட்டோ, கறுப்பு நிற டொயோட்டா அல்ஃபார்ட் ஆகிய மூன்று வாகனங்கள் வளாகத்தில் இருந்து வெளியேறியதைச் செய்தியாளர்கள் கண்டனர். செர்ட்டிஸ் சிஸ்கோ நிறுவனத்தைச் சேர்ந்த இரு ஓட்டுநர்களும் காவல்துறை கார் ஒன்றும் அந்த மூன்று வாகனங்களுக்கு முன்னால் சென்றன. அந்த வாகனங்கள் எதிலும் திரு கோத்தபாய காணப்படவில்லை.

