ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் கட்சி அண்மைய தேர்தலில் வெற்றி பெற்றதற்காக அவருக்கு பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து அனுப்பியுள்ளார்.
முன்னைய பிரதமர் ஷின்சோ அபேவின் மறைவால் துயரம் மிகுந்த காலகட்டத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றார் பிரதமர் லீ.
அதே நேரத்தில் இந்த வெற்றி திரு கிஷிடாவின் தலைமைத்துவம் மீது ஜப்பானிய மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வலுவான அறிகுறி என்று திரு லீ தெரிவித்தார்.
திரு லீ தமது வாழ்த்துக் கடிதத்தை திரு கிஷிடாவுக்கு நேற்று அனுப்பினார்.
கடந்த ஜூலை 10ஆம் தேதி ஜப்பானின் நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திரு கிஷிடாவின் தலைமையிலான மிதவாத ஜனநாயகக் கட்சியும் அதன் கூட்டணி கட்சியும் பெரும் வெற்றியைப் பெற்றன.
தேர்தலுக்கு இரண்டு நாள் களுக்கு முன்னர்தான் திரு ஷின்சோ அபே, பிரசாரக் கூட்டத்தில் துப்பாக்கிக்காரனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரதமர் கிஷிடாவுக்கு அனுப்பிய கடிதத்தில் சிங்கப்பூருக்கும் ஜப்பானுக்கும் இடையே சிறந்த பன்முனை உறவு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதற்கு இருநாட்டு மக்களிடையே மனமார்ந்த பிணைப்பும் பல துறைகளிலும் அணுக்கமான ஒத்துழைப்பும் அடித்தமளமாக உள்ளது என்றார் திரு லீ.
இரு தலைவர்களும் அண்மையில் தோக்கியோவிலும் சிங்கப்பூரிலும் சந்தித்தபோது அவர்கள் மின்னிலக்கமயம், புத்தாக்கம், தற்காப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்கியதாக பிரதமர் லீ தெரிவித்தார்.

