தென்கிழக்காசிய வட்டாரத்தில் எரிசக்தி தொடர்புகளை மேம்படுத்தும் சாத்தியத்தை ஆய்வு செய்வதில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஆர்வம் தெரிவித்துள்ளன.
இரண்டாம் வர்த்தக, தொழில் அமைச்சர் டான் சீ லெங்கும் அமெரிக்க எரிசக்தி அமைச்சர் ஜெனிஃபர் கிரான்ஹோல்மும் நேற்றுமுன்தினம் சிங்கப்பூரில் சந்தித்தபோது இது குறித்து பேசப்பட்டது.
ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற அமெரிக்க-தென்கிழக்காசிய தூய்மையான எரிசக்தி வட்ட மேசைக் கலந்துரையாடலுக்கு இடையே இரண்டு அமைச்சர்களும் சந்தித்தனர்.
சிங்கப்பூருக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான எரிசக்தித் துறை ஒத்துழைப்பின் முக்கியத் துவத்தை இரண்டு அமைச்சர்களும் தங்கள் கூட்டறிக்கையில் வலி யுறுத்தினர்.
எரிசக்திப் பாதுகாப்பு, தூய்எமையான எரிசக்திக்கு மாறுதல், வட்டார அளவிலான எரிசக்தித் தொடர்புகள் ஆகிய அம்சங்களில் இருநாடுகளின் மேம்பட்ட எரிசக்தி ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அவர்கள் மறு உறுதிப்படுத்தினர்.
நாடுகள் ஒத்துழைக்கும்போது, தென்கிழக்காசியாவில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியில் இதுவரை பயன்படுத்தப்படாத வாய்ப்புகளை மேலும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
அத்துடன், தூய்மையான எரிசக்தியில் முதலீட்டை முடுக்கிவிடலாம் என்றும் பசுமை எரிசக்தித் துறையில் புதிய வேலைகளை உருவாக்கலாம் என்றும் அமைச்சர்கள் கூட்டறிக்கையில் கூறினர்.
மேலும், இந்த வட்டாரத்தில் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியையும் குறைந்த கரியமிலத்தை வெளியேற்றும் புதிய தொழில்நுட்பங்களையும் விரிவுபடுத்த அரசாங்கக் கொள்கை வகுக்கும் அதிகாரிகள், தனியார் துறையினர், நிதி வழங்கு வோர் ஆகியோர் மேற்கொள்வதை இரு அமைச்சர்களும் வரவேற்றனர்.

