உள்துறை அமைச்சு, மொத்தம் 148 அதிகாரிகளின் மேற்படிப்புக்காக உபகாரச்சம்பளங்களையும் நிதி உதவியையும் வழங்கியுள்ளது.
உள்துறை அமைச்சின் உபகாரச்சம்பள, நிதி ஆதரவு விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. அவற்றைப் பெற்றவர்களில் 118 பேர் இள நிலைப் பட்டப்படிப்பை மேற்கொள்வர். 30 அதிகாரிகள் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்வர்.
மேலும் எட்டு அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சின் புத்தகப் பரிசு வழங்கப்பட்டது. தங்கள் வகுப்பில் தலைசிறந்த மாணவர்களாக விளங்கியவர்களுக்கும் சிற்நத ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இவர்கள் சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் லிவர்பூல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வழங்கும் குற்றவியல், பாதுகாப்பில் இளநிலை (ஹானர்ஸ்) பட்டத்துக்கும் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் பொதுப் பாதுகாப்பு, (ஹானர்ஸ்) பட்டத்துக்கும் பயில்கின்றனர்.
உபகாரச்சம்பளத்தையும் நிதி ஆதரவையும் பெறும் அதிகாரிகள், குறிப்பிட்ட காலத்துக்கு உள்துறை அமைச்சில் பணியாற்ற வேண்டும்.
உள்துறை அமைச்சு தலைமை யகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொடர்பு, தகவல் அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திருமதி ஜோசபின் டியோ கலந்துகொண்டார். அதிகாரிகளுக்கு வாழ்த்துக் கூறிய திருமதி டியோ, அவர்கள் வழங்கிய உறுதியான ஆதரவுக்கும் தியாகத்துக்கும் நன்றி தெரிவித்தார். உள்துறை அமைச்சு அதன் பணியை இதுவரை சிறப்பாகச் செய்துள்ளது என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு செயல்படும் கேலப் நிறுவனத்தின் சட்ட ஒழுங்கு குறியீட்டில் சிங்கப்பூர் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக ஆகப் பாதுகாப்பான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
"உள்துறை அமைச்சின்மீது பொதுமக்களுக்கு அதிகளவில் நம்பிக்கை உள்ளது, என்றார் அவர்.
இருப்பினும் பல சவால்கள் உள்ளதால், அதிகாரிகளின் மேம்பாட்டில் உள்துறை அமைச்சு முதலீடு செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
"மாறிக்கொண்டே இருக்கும், சிக்கலான, எதிர்பாரா நிகழ்வுகள் அதிகரித்துவரும், நிலையில்லா சூழலில் நாம் இயங்கி வருகிறோம்," என்று திருமதி டியோ கூறினார்.
எதற்கும் நாம் தயாராய் இருக்கவேண்டும் என்ற அவர், பயங்கரவாதம், மோசடிகள், விரோதப் போக்குள்ள தகவல்களைப் பரப்புதல், சமூகப் பிளவுகள் போன்றவற்றை முன்கூட்டியே தடுக்க வேண்டும் என்று அமைச்சர் சொன்னார்.

