தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வில் (பிஎஸ்எல்இ) ஒவ்வோர் ஆண்டும் 15 விழுக்காட்டுக் கேள்விகள் சவால்மிக்கவையாக வகைப்படுத்தப்படுகின்றன.
பிஎஸ்எல்இ தேசிய தேர்வு ஒவ்வோர் ஆண்டும் ஒரே அளவில் கடுமையாக இருக்கும்படி வைக்கப்படுவதாக கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் திருவாட்டி லியூ வெய் லி கூறியுள்ளார்.
அதாவது ஒவ்வோர் ஆண்டும் சில சவாலான கேள்விகள் மட்டும் இடம்பெறும் என்றும் அவை சுமார் 15 மதிப்பெண்களாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தமது லிங்க்டின் பக்கத்திலும் கல்வி அமைச்சின் பள்ளிப்பை இணையத்தளத்திலும் அவர் இது பற்றி பதிவிட்டார்.
கணிதத் தேர்வில் இடம்பெற்ற சில கேள்விகள் பற்றி பொது வெளியில் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் "உண்மையில் தேர்வில் அத்தகைய கேள்விகள் குறைவே," என்று திருவாட்டி லியூ. தெரிவித்தார்.
"ஒவ்வொரு தேர்வுத் தாளின் ஒட்டுமொத்தத் தரமும் அதில் உள்ள பல்வேறு கேள்விகளின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது என்றும் ஹெலன் அண்ட் ஐவன் எனும் ஒரு கேள்வியை வைத்து மட்டுமல்ல என்றும் நினைவில் கொள்வது முக்கியம்," என்றார் அவர். கடந்த ஆண்டு பிஎஸ்எல்இ தேர்வு எழுதிய மாணவர்களை அழவைத்த மிகக் கடுமையான கேள்வி பற்றியே பதிவில் அவர் குறிப்பிட்டார்.
பிஎஸ்எல்இ கணிதத் தேர்வின் கேள்விகள் பற்றி பல ஆண்டு களாக ஆதங்கம் தொடர்கிறது.
கேள்விகள் மிதமிஞ்சி கடுமையாக உள்ளதாக அவ்வப்போது குறைகூறப்படுகிறது.
கடந்த ஏப்ரலில் கல்வி அமைச்சின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்ற திருவாட்டி லியூ, பல்வேறு திறன்கள் கொண்ட மாணவர்களுக்கு ஏற்றவாறு பிஎஸ்எல்இ தேர்வு அமைக்கப்படுவதாகக் கூறினார்.
பெரும்பாலான கேள்விகளுக்கு பெரும்பாலான மாணவர்கள் பதில் சொல்ல முடியும். ஒருசில கேள்வி கள் மட்டும் வலுவான மாணவர் களின் திறனைச் சோதிக்கும் வகையில் அமைகின்றன என்று திருவாட்டி லியூ சொன்னார்.
பிஎஸ்எல்இ தேர்வின் புதிய மதிப்பீட்டு முறை கடந்த ஆண்டு நடப்புக்கு வந்தது.

