பிரதமர் லீ சியன் லூங்கும் அவரது மனைவி திருவாட்டி ஹோ சிங்கும் புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் 76வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நேற்று கலந்துகொண்டனர்.
புருணை தலைநகரம் பண்டார் ஸ்ரீ பகவானில் உள்ள நூருல் இமான் மாளிகையில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் 23 பேரை கௌரவிக்கும் அரசாங்க விருதுகளை புருணை சுல்தான் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் தாம் பெருமை கொள்வதாக பிரதமர் தமது சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்தார். சுல்தான் போல்கியாவை மீண்டும் சந்தித்ததில் மகிழ்வதாகவும் அவர் கூறினார். புருணை சுல்தானின் சகோதரர்களான இளவரசர் முகம்மது போல்கியா, இளவரசர் சுஃப்ரி போல்கியா, இளவரசர் ஜெஃப்ரி போல்கியா ஆகியோரையும் பிரதமர் லீ சந்தித்தார்.
புருணை சுல்தானுக்கு தமது பிறந்தநாள் வாழ்த்தையும் திரு லீ தெரிவித்தார்.
நேற்று காலையில் பண்டார் ஸ்ரீ பகவானில் மையத்தில் வழக்கமான சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. பின்னர் விருது நிகழ்ச்சி இடம்பெற்றது.
அதில் பேசிய சுல்தான் போல்கியா, புருணை கொவிட்-19 பரவலிலிருந்து மீட்சி கண்டு பொருளியல் வளர்ச்சியில் முன்னேறிச் செல்லும் என்று உறுதி அளித்தார்.
புருணையை பல்முனைப் பொரு ளியலாக மாற்றும் முயற்சிகள் பலன்தரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
புருணையின் எண்ணெய்-எரிவாயு சாராத துறைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு நான்கு முதல் ஐந்து விழுக்காடு வளர்ச்சி கண்டு வருவதாக அவர் கூறினார்.
பிரதமர் லீக்கும் திருவாட்டி ஹோ சிங்குக்கும் புருணை சுல்தான் இன்று நூருல் இமான் மாளிகையில் அரச விருதுகளை வழங்குவார்.

