பொய்யான நீதிமன்ற ஆணை ஒன்றின்கீழ் ஒருவரிடம் உள்ள சொத்துகளைக் கைப்பற்றவுள்ளதாக மோசடிக்காரர்கள் மிரட்டல் விடுத்து வருவது தொடர்பில் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சிங்கப்பூரின் நீதிமன்றங்கள் தங்களுக்கு அனுமதி வழங்கி இருப்பதாகக் கூறிக்கொண்டு சொத்துகள் பறிபோவதைத் தடுப்பதற்கு உடனடியாக ஆயிரக்கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என இந்த மோசடிக்காரர்கள் கூறிவருவதாக நம்பப்படுகிறது.
பொதுவாக, இந்த மோசடிக் கும்பல் தொலைபேசிவழி தொடர்புகொண்டு தாங்கள் சட்ட நிறுவனம் ஒன்றை பிரதிநிதிப்பதாகத் தங்களை அறிமுகப்படுத்திக்கொள்வர் என்று அறியப்படுகிறது.
தாங்கள் குறிவைத்தவரின் வீட்டு முகவரியை அறிந்துகொண்டு சரிபார்ப்பதாகக் கூறி முழுப் பெயர், அடையாள அட்டை எண், வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றையும் கேட்டறிய முயல்வர். பின்னர், வீட்டையும் உடைமைகளையும் கைப்பற்றுவதற்கான அமலாக்க ஆணையை நிறுத்துவதற்குச் சுமார் 3,000 வெள்ளியை அனுப்புமாறு மோசடிக்காரர்கள் கூறுவர்.
சிங்கப்பூரில் கைப்பற்றுகை உத்தரவாணைபடி வாடகைதாரர் தனது வாடகையைச் செலுத்தாத நிலையில் நில உரிமையாளர் அந்த வாடகைதாரரின் உடைமைகளைக் கைப்பற்றி அவற்றை விற்கலாம்.
இந்நிலையில், சட்ட நிறுவனத்தைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்டு தொலைபேசியில் தொடர்புகொள்வோரிடம் தனிநபர் தகவல்களை வெளியிட வேண்டாம் என்று நீதிமன்றங்கள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.
அத்துடன் 63360644 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு மோசடிக்காரர்கள் கூறலாம் என்றும் அது உச்சநீதிமன்றம் முன்னதாக பயன்படுத்திய தொடர்பு எண் என்றும் கூறப்பட்டது.
மேலும், தொலைபேசித் திரையில் தோன்றும் தொடர்பு எண்ணின் முன்னால் +65 என்றிருந்தால் அந்த அழைப்பு வெளிநாட்டிலிருந்து வருவதாகப் பொதுமக்கள் அறிந்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கட்டணம் செலுத்துதல், தனிநபர் விவரங்களைக் கோருதல் போன்றவை குறித்துப் பொதுவாக தொலைபேசிவழி தொடர்புகொள்வதில்லை என்று நீதிமன்றங்கள் தெளிவுப்படுத்தின.
பதிவாளர் உத்தரவு ஒன்றின் மூலமாக அல்லது உச்ச நீதிமன்றம், அரசு நீதிமன்றம், குடும்ப நீதிமன்றங்கள் ஆகியவற்றின் கடிதப் போக்குவரத்து மூலம் இத்தகைய தகவல்களை நீதிமன்றங்கள் கோருவது வழக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

