தனியார் கூட்டுரிமை வீட்டு பாதுகாவல் அதிகாரி ஒருவரின் கால்மீது ஓர் ஆடவர் தன் வாகனத்தை ஏற்றிச் சென்றதாக காவலர்களுக்குப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் தொழிற்சங்கம், நேற்று முன்தினம் பதிவிட்டிருந்தது.
கடந்த மாதம் 17ஆம் தேதியன்று நடந்த இச்சம்பவத்தில் பாதுகாவல் அதிகாரிக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாலஸ்டியர் ரோடு அருகே ஜாலான் ராஜா பகுதியில் அமைந்துள்ள 'ஸ்கைசூட்ஸ் 17' கொண்டோமினிய வளாகத்தில் காயமடைந்ததாகக் கூறப்படும் 45 வயது பாதுகாவல் அதிகாரி கவிதா சந்திரசேகரன் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
"காரில் வந்திருப்பவர் வருகையாளராக குடியிருப்பாளரா என்பதைச் சரிபார்ப்பதற்காக வளாகத்தினுள் நுழைவதற்கான தடுப்பருகே வாகன ஓட்டுநரை கவிதா தடுத்து வைத்தார். உள்ளே நுழைவதற்கு வாகனங்கள் பதிவுசெய்யப்பட்டவையாக இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆடவரின் வாகனத்தில் அத்தகைய பதிவு தென்பட்டதாகத் தெரியவில்லை," என்றது தொழிற்சங்கம்.
ஆடவரின் அடையாளத்தை கவிதா சரிபார்த்துக்கொண்டிருந்த வேளையில் அவரின் வலது கால்மீது ஆடவர் தன் வாகனத்தை ஏற்றிச்சென்றதாகவும் அதையடுத்து கவிதாவைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.
"காவலர்களிடம் இது குறித்துப் புகார் அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கவிதா, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அவருக்கு ஏற்பட்டது சிறு காயமே என்ற நிலையில் தற்போது மீண்டும் அவர் வேலைக்குத் திரும்பியுள்ளார்," என்றது தொழிற்சங்கம்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முழு விவரங்களையும் அறிந்திட வேண்டும் என்பதில் தொழிற்சங்கம் குறியாய் உள்ளது என்றும் பெண் பாதுகாவல் அதிகாரிக்குக் காயம் விளைவிக்கும் நோக்கில் வாகன ஓட்டுநர் இவ்வாறு நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டது.
படம்: திருவாட்டி ச.கவிதா

