நிறுவனங்கள் நொடித்துப்போகும் நிலை என்பது, மெதுவாக தொடங்கி பிறகு திடீரென்று நிகழ்ந்துவிடும். நாடுகளுக்கும் இது பொருந்தும். 2020ஆம் ஆண்டில் கொவிட்-19 தலைதூக்கியது முதலே இலங்கை பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்கிய நாடு.
தொற்றுக்கு முன்னே பல ஆண்டுகளாக பொருளியலைச் சரிவர நிர்வகிக்காத நிலை; அதிகார நிர்வாகம் மெத்தனமாக இருந்தது; உணவு, எரிபொருள் விலை உயர்வு போன்ற புற நெருக்கடிகள் இருந்தபோதிலும் அவற்றைச் சமாளிக்கத் தோதாக மாறிக்கொள்ள விருப்பம் இல்லாமலேயே இருந்து வந்தது எல்லாம் சேர்ந்து இலங்கையின் நிலைமையை மோசமாக்கிவிட்டன. சில மாதங்களிலேயே அங்கு நிலைமை பேரழிவாகிவிட்டது.
அனைத்துலக பண நிதியம், வழக்கம் போல் இந்த ஆண்டும் இலங்கை அதிகாரிகளைக் கலந்து ஆலோசித்த பிறகு மார்ச் மாதம் இலங்கை நிலவரங்களைக் கணித்து ஓர் அறிக்கை வெளியிட்டது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்த ஆண்டு பூஜ்ஜியத்திற்குக் கீழே 7% வரை இறங்கிவிடும் என்று அது தெரிவித்தது. மார்ச்சில் பணவீக்கம் 14% ஆக இருந்தது. இது ஜூனில் 55% ஆகிவிட்டது.
US$2.2 பில்லியனாக இருந்த அந்நியச் செலாவணி ஒன்றுமில்லாமல்போய்விட்டது. இலங்கைக்கு US$51 பில்லியன் கடன் இருக்கிறது. இலங்கை நாணய மதிப்பு மார்ச் மாதம் டாலருக்கு சுமார் 230 ரூபாயாக இருந்தது. அது டாலருக்கு சுமார் 360 ரூபாய் என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. நாட்டில் ஏறக்குறைய எரிபொருள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். அரசாங்கம் சீரழிந்து அதிபர் நாட்டைவிட்டு ஓடிவிட்டார். பிரதமரும் நிதி அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க, மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட எஞ்சி இருக்கின்ற தலைவர்கள், பொருளியலை சரிப்படுத்த தலைகீழ் சீர்திருத்தங்கள் தேவை என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
இதற்கு அனைத்துலக பண நிதியத்தின் ஆதரவுடன் கூடிய பரந்த அளவிலான பொருளியல் செயல்திட்டங்கள் தேவை.
இருந்தாலும் அத்தகைய எந்த ஒருதிட்டமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமானால் அதற்கு இரண்டு நிபந்தனைகளை நிறைவேற்றியாக வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடிய திட்டங்களை நிறைவேற்ற இலங்கைக்கு நிலையான அரசாங்கம் தேவை.
இரண்டாவது, இலங்கை தனது கடன் அடைப்புத் திட்டங்களை திருத்தி அமைக்க வேண்டிய தேவை இருக்கும். இந்நிபந்தனைகளை நிறைவேற்றினால்தான் அனைத்துலக பண நிதியத்தின் ஆதரவு கிடைக்கும்.
இந்த இரு நிபந்தனைகளையும் நிறைவேற்றுவதற்கு காலம் பிடிக்கும்போல் தெரிகிறது. இப்போதைக்குப் பார்க்கையில், எதிர்கால அரசாங்கம் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை.
கடன் கொடுப்போருடன் இடம்பெறக்கூடிய பேச்சுவார்த்தைகளும் இழுபறியாகவே இருக்கக்கூடும். இலங்கை தன்கடன் அடைப்புத் திட்டத்தை ஆகஸ்ட் முடிவில் பண நிதியத்திடம் தாக்கல் செய்யலாம் என்று நம்புகிறது.
நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இலங்கைக்கு உதவக்கூடிய ஒரு செயல்திட்டத்தையும் நிதி ஆதரவையும் அனைத்துலக பண நிதியம் அங்கீகரிக்கும் என்பதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், சீனா, இந்தியா உள்ளிட்ட இலங்கைக்கு முக்கியமான நாடுகள் அதற்கு ஆதரவாக செயல்படும் என்று நம்பலாம். இதற்கெல்லாம் எப்படியும் செப்டம்பர் ஆகிவிடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே, இலங்கை குறுகிய கால உதவிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்தியா ஏற்கெனவே இலங்கைக்கு கணிசமான அளவுக்கு உதவி இருக்கிறது.
அவசர உதவியாக ஏறக்குறைய US$3.8 பில்லியன் தொகையை இலங்கைக்கு கொடுக்கப்போவதாக இந்தியா ஏற்கெனவே உறுதி கூறி இருக்கிறது. அதோடு மட்டுமின்றி, எரிபொருள் இறக்குமதிக்காக தனியாக US$500 மில்லியன் தொகையை இலங்கை இந்தியாவிடம் கேட்கிறது. மேலும் இந்தியாவிடம் இருந்து US$1 பில்லியன் கடனை இலங்கை கேட்கிறது.
அனைத்துலக பண நிதியத்துடன் உடன்பாடு ஏற்பட்ட பிறகு இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகள் கூட்டாக தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதன் தொடர்பில் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அனைத்துலக பண நிதியத்துடன் 2016 முதல் 2019 வரை இலங்கை ஒரு செயல்திட்ட உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
ஆனால் 2017ல் ஏற்பட்ட பஞ்சம், 2018ல் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, 2019 பயங்கரவாதத் தாக்குதல் போன்ற காரணங்களால் அந்தத் திட்டத்தை முற்றிலும் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
அனைத்துலக பண நிதியத்தின் அதிவேக நிதியுதவி திட்டத்தின்கீழ், இலங்கை மேலும் ஆதரவைப் பெறும் வாய்ப்பும் இருக்கிறது. இருந்தாலும் இத்தகைய ஒரு வாய்ப்பை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமானால் நாடு மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குள் பரந்த அளவிலான தீவிர சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டி இருக்கும்.
இலங்கை எதிர்நோக்கும் முன்னுரிமைகளில் வரி சீர்திருத்தம் முக்கியமானது. இலங்கை முன்னர் வருமான வரியையும் வாட் வரியையையும் குறைத்தது.
செலவினங்களை மிகவும் கவனமாக நிர்வகிக்க வேண்டும். எரிபொருள், இதர மானியங்களை குறைக்க வேண்டி இருக்கும். பொது கடன்கள், கடன் வசதிகள் போன்றவற்றுக்கு வரம்பு விதிப்பது போன்ற கடுமையான நிதித் துறை விதிமுறைகளை அமல்படுத்த வேண்டி இருக்கும்.
சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரி உயர்வு, மானியம் குறைப்பு, கடுமையான நிதித்துறை விதிமுறைகள் போன்ற இத்தகைய சீரமைப்புகள் கொஞ்ச காலத்திற்காவது மிகவும் சிரமமானதாகவே இருக்கும்.
இலங்கை பொருளியலை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புவது என்பது நீண்டநெடுங்கால கடும் முயற்சியாகவே இருக்கும்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2018ஆம் ஆண்டு இருந்த அளவுக்கு 2026ல் தான் திரும்பக்கூடும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இலங்கையில் ராஜபக்சே யுகம் முடிவுக்கு வந்திருக்கிறது. பொருளியல் பிரச்சினைகளின் ஆழத்தை நன்கு புரிந்துகொண்டு அந்தப் பிரச்சினை களைக் களைவதற்கான தேவை இருக் கிறது என்பதை ஒப்புக்கொண்டு செயல் பட்டால்தான் இலங்கை படுமோசமான நிலையில் இருந்து விடுபட்டு மீண்டு தலைதூக்கும்.
விக்ரம் கன்னா
இணை ஆசிரியர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

