ஜி20 நாடுகளுக்கு முக்கியப் பணி
ஜி20 நாடுகள், உணவுப் பொருட்கள் போதிய அளவுக்கு இருப்பதை உறுதிப்படுத்துவது போன்ற இப்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோடு, கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம் போன்ற நீண்டகால பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் முக்கிய பங்காற்றுவதாக துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பாலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஜி20 நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களின் மூன்றாவது கூட்டத்தில் பேசிய அவர், உலகப் பொருளியல் பற்றியும் அனைத்துலக நிதி ஏற்பாடுகள் குறித்தும் கருத்துகளைத் தெரிவித்தார். எல்லா நடுகளுமே இப்போது சிக்கலான சூழ்நிலையை எதிர்நோக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
உலகப் பொருளியல் வாய்ப்புகள் நிச்சயமில்லாமல் இருக்கின்றன. இந்தச் சூழலில் அனைத்துலக பண நிதியம், உலக வங்கி போன்ற பலதரப்பு அமைப்புகளின் பணி இதுவரை இல்லாத அளவுக்கு முக்கியமானதாக ஆகி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
'ஹங்கிரி கோஸ்ட்' கொண்டாட்டம்
'ஹங்கிரி கோஸ்ட்' திருவிழா கொண்டாட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதம் முழு மூச்சில் கொண்டாடப்படுகின்றன.
இருந்தாலும்கூட பணவீக்கம், இப்போதைய கொரோனா தொற்று காரணமாக மேடை நிகழ்ச்சிகளும் அதிக ஒலி எழுப்பும் ஏலங்களும் விருந்துகளும் அவ்வளவாக இடம் பெறமாட்டா என்று தெரிகிறது. ஹங்கிரி கோஸ்ட் திருவிழா சீனப் பஞ்சாங்கத்தின் 7வது மாதத்தின் 15வது நாளில் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி விழா வருகிறது. பஞ்சாங்கத்தின் 7வது மாதம் முழுவதிலும் அதாவது இந்த ஆண்டு ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 26 வரை பல சீனர்கள், தங்கள் மூதாதையர்களை உணவுப் பொருட்கள், ஊதுவர்த்திகள், மெழுகுவர்த்திகள் காகிதப் பணம் ஆகியவற்றைக் கொண்டு வழிபடுவார்கள்.
அந்தக் கொண்டாட்டங்களையொட்டி விருந்துகள், ஏலம், மேடைக்கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
இதனிடையே, விழாவின்போது பொறுப்புள்ள முறையில் நடந்துகொண்டு குப்பைக்கூளங்களைத் தவிர்க்க, மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளை நடைமுறைப்படுத்த புதிய ஒரு கூட்டணி செயலில் இறங்கி இருக்கிறது.
'காகிதப் பண எரிப்பு நியதிகள் செயற்குழு' என்ற அந்த அமைப்பில் பத்துக்கும் மேற்பட்ட சீன சமய, கலாசார, தொழில்துறை சங்கங்களின் பிரமுகர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
கொலைச் சம்பவத்தை கடந்து மேம்படும் பள்ளிச் சமூகம்
ரிவர் வேலி உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவன், சென்ற ஆண்டில் 13 வயது சக மாணவனைப் பள்ளிக்கூடத்தில் கொலைசெய்துவிட்டதாகக் கூறப்பட்டது.
அந்தச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டு ஓடிவிட்டது. அதிலிருந்து விடுபட்டு ஒற்றுமையாக அந்தப் பள்ளிக்கூட சமூகம் இப்போது தொடர்ந்து முன்நோக்கிச் செல்கிறது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரர்களின் ஏகோபித்த ஆதரவு, ஊக்கம், அக்கறை ஆகியவை காரணமாக இது சாத்தியமாகி இருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு அளித்த விளக்கத்தில் அமைச்சு குறிப்பிட்டது.
கடந்த ஓராண்டுக்கும் மேற்பட்ட காலமாகவே அந்தப் பள்ளிக்கூடம் சமூக, மனநிலை ஆதரவு தேவைப்படக்கூடிய மாணவர்களையும் ஊழியர்களையும் கண்டுபிடித்து அவர்களுக்கு உதவ ஒருமித்த முயற்சிகளை எடுத்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
அந்தப் பள்ளிக்கூடத்திற்கு கூடுதலாக ஆலோசகர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு மனநல புரிந்துணர்வு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
சமூக, மனநலன் உதவி தேவைப்படும் மாணவர்களை ஈடுபடுத்தவும் பரிவுமிக்க பள்ளிச்சூழலை ஏற்படுத்தவும் ஆசிரியர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. அதனை அடுத்து அந்தப் பள்ளிக்கூடத்தில் பல்வேறு நடவடிக்கைகளும் நடைமுறைகளும் மறுபடியும் தொடங்கி இருக்கின்றன.
அறிமுக வகுப்புகள், மலை ஏறுதல், கற்றல் பயணங்கள், சிங்கப்பூர் இளையர் விழா, தேசிய பள்ளி விளையாட்டு கள் போன்ற பல்வேறு பள்ளிக்கூட செயல் திட்டங்களில் மாணவர்கள் தீவிரமாக பங்கெடுத்துக்கொண்டுள்ளனர்.

