ராஜபக்சேக்கு எதிராக பேச்சாளர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்

ராஜபக்சேக்கு எதிராக பேச்சாளர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம்

2 mins read
1d042b4d-8415-4b0f-9f32-9663f273857e
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே சிங்கப்பூருக்குள் அனமதிக்கப்பட்டதை எதிர்த்து ஹொங் லிம் பேச்சாளர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து ஹொங் லிம் பேச்சாளர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஒருவர் மட்டுமே கலந்துகொண்டார்.

2020 பொது தேர்தலில் மக்கள் குரல் கட்சி வேட்பாளர் பிரபு ராமச்சந்திரன் இதற்கு ஏற்பாடு செய்திருந்தார். "இது குறித்து யாரும் கருத்துரைக்கவில்லை. திரு ராஜபக்சே மற்ற இலங்கையர்கள் போல் அல்ல. அவர் ஒருவர் அரசியல்வாதி. இலங்கை மக்களே அவரை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டனர். அவரை இங்கு அனுமதித்திருக்கக்கூடாது", என்று அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டம் பேஸ்புக் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதை சுமார் 20 பேர் கண்டனர்.

இதனிடையே திரு ராஜபக்சே சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்பட்டதை குறித்து சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர்கள், இலங்கை வம்சாவளி சிங்கப்பூரர்கள் ஆகியோர் சிலரிடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பேசியது. பலரும் கருத்துரைக்க மறுத்துவிட்டனர்.

கருத்துரைத்த சிலர் திரு ராஜபக்சேவை இங்கு வர அனுமதித்தது, சிங்கப்பூரின் ஊழல், இனவாதம் எதிரான கொள்கைகளுக்கு மாறாக இருப்பதாக குறிப்பிட்டனர்.

இலங்கை பொருளியலை மோசமாக நிர்வாகம் செய்ததோடு, 2009ல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் பல்லாயிரம் தமிழர்கள் அவர் மேற்பார்வையின் கீழ் கொல்லப்பட்டனர். அவர் அப்போது தற்காப்பு அமைச்சராக பதவி வகித்தார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு சிங்கப்பூர் வழக்கறிஞர், திரு ராஜபக்சேவை இங்கு அனுமதித்த முடிவு தனக்கு வேதனை தருவதாகக் கூறினார். இலங்கையின் பொருளியல் நெருக்கடிக்கு திரு ராஜபக்சேவே காரணம். இவர் சிங்கப்பூருக்கு வர அனுமதிக்கப்பட்டது ஏன் என அவர் வினவினார்.