வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டு சன்னலில் இருந்து ஐந்து குரங்குகள் லாகவமாக இறங்கும் காட்சி காணொளி ஒன்றில் பதிவாகியுள்ளது. பேஸ்புக் பக்கம் ஒன்றில் இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது.
புளோக் 118 கிளமெண்டி ஸ்திரீட் 13ல் இந்த சம்பவம் நடந்ததாக இணையவாசிகள் நம்புகின்றனர்.
காணொளி தொடங்கும்போது, புளோக் அடித்தளத்தில் ஒரு குரங்கு அலைந்துகொண்டிருக்கிறது. புளோக்கின் வெளிப்புற சுவரை பிடித்துகொண்டு மூன்று குரங்குகள் கீழே இறங்கி வருகின்றன. சில நொடிகள் கழித்து, ஒரு வீட்டின் சமையல் அறை சன்னலில் இருந்து ஐந்து குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியே வந்து சுவரை பிடித்துகொண்டு கீழே இறங்குகின்றன. அனைத்தும் ஒருவழியாக அடித்தளத்துக்கு வந்துசேர்கின்றன.
ஒரு வீட்டிலிருந்து இத்தனை குரங்குகளா என இந்த காணொளியை பார்த்த பலர் வியப்படைந்தனர். குரங்குகள் வீட்டுக்குள் வராமல் தடுக்க வீட்டில் இல்லாதபோது சன்னல்களை மூடவும் அல்லது தடுப்பு கம்பிகளை போடவும். உணவு இருக்கும் பாத்திரங்களை ஒழுங்காக மூடிவைக்கவும் என்று தேசிய பூங்கா வாரியம் அறிவுறுத்தியது.

