பாண்டான் நீர்த்தேக்கத்தில் உள்ள பிரத்தியேகப் பகுதியில் பொழுதுபோக்கிற்காக பறக்கவிடலாம்
ஆளில்லா வானூர்திகளைப் பொழுதுபோக்கிற்காக பறக்கவிடுவோர், இனி அதற்கான உரிமத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. பாண்டான் நீர்த்தேக்கத்தில் உள்ள பிரத்தியேகப் பகுதியில் வானூர்திகளைப் பறக்கவிடலாம்.
16 ஹெக்டர் பரப்பளவிலான இந்தப் பகுதி, வானூர்திகளைப் பறக்கவிடுவோரின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் அதே வேளையில், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் என்று போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
"பொழுதுபோக்கிற்காக ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை நாங்கள் காண்கிறோம்," என்று சொன்ன அவர், சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட வானூர்திகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்து இருப்பதைச் சுட்டினார்.
பாண்டான் நீர்த்தேக்கத்தில் உள்ள இந்தப் பிரத்தியேகப் பகுதியில் வானூர்திகளைப் பறக்கவிடும்போது, சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு பயனாளர்கள் நடக்க வேண்டும்.
கடல்மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்திற்கு மேலே வானூர்திகளைப் பறக்கவிடக்கூடாது. மேலும், 250 கிராமுக்கு மேல் எடையுடைய வானூர்தியைப் பறக்கவிடுவதற்கு முன்பு, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் அதைப் பதிவுசெய்ய வேண்டும்.
25 கிலோகிராமுக்கு மேல் எடையுடைய வானூர்தியைப் பறக்கவிடுவோரும் பொழுதுபோக்கு தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வானூர்தியைப் பறக்கவிடுவோரும் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.
பாண்டான் நீர்த்தேக்கத்தில் வானூர்திகளைப் பறக்க விடுவதற்கான எல்லையைச் சுற்றி மஞ்சள் மிதவைகள் உள்ளன. மேலும், அருகிலுள்ள வீடமைப்பு புளோக்குகளில் இருந்து இந்தப் பகுதி குறைந்தது 400 மீட்டர் தூரத்தில் உள்ளது.
அன்றாடம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நீர்த்தேக்கத்தில் வானூர்திகளைப் பறக்கவிடலாம்.
வானூர்திகளைப் பறக்கவிடுவதன் தொடர்பிலான தகவல்களை உடனுக்குடன் பெற, டெலிகிராம் செயலியில் உள்ள உரையாடல் குழு ஒன்றில் பொதுமக்களுக்கு சேரலாம்.
ஆளில்லா வானூர்தி சமூகம் மற்றும் இப்பகுதிக்கு அருகில் வசிக்கும் குடியிருப்பாளர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் கருத்துகள் ஆராயப்படும் என்று திரு ஈஸ்வரன் சொன்னார்.

