தேசிய விளையாட்டரங்கில் லிவர்பூல், கிறிஸ்டல் பேலஸ் காற்பந்துக் குழுக்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்திற்குப் பிறகு தடுப்புவேலியைத் தாண்டி காற்பந்துத் திடலுக்குள் நுழைந்த ஆடவர் இருவர், காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.
இந்த ஆட்டத்தைக் காண விளையாட்டரங்கிற்கு 50,217 ரசிகர்கள் வந்திருந்தனர்.
தேசிய விளையாட்டரங்கில் உதவி கோரி நேற்று முன்தினம் இரவு 11.19 மணிக்கு காவல்துறைக்கு அழைப்பு வந்ததாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
"காற்பந்துத் திடலுக்குள் அத்துமீறி நுழைந்ததாக 17, 41 வயதுடைய ஆடவர் இருவர் விசாரணைக்கு உதவி வருகின்றனர்," என்று அவர் சொன்னார்.
ஆட்டம் முடிந்த பிறகு, காற்பந்துத் திடலின் ஓரத்திற்கு வந்து லிவர்பூல் ஆட்டக்காரர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது லிவர்பூல் சீருடை அணிந்திருந்த ஆடவர் இருவர், காற்பந்துத் திடலைச் சுற்றியுள்ள விளம்பரப் பலகையைத் தாண்டி திடலுக்குள் அடுத்தடுத்து நுழைந்தனர்.
லிவர்பூல் ஆட்டக்காரர்களைக் கடந்து ஓடிய முதலாமவரைப் பிடிக்க பாதுகாவல் அதிகாரிகள் முதலில் மேற்கொண்ட முயற்சி கைகூடவில்லை. திடலைச் சுற்றி ஓடிய அவரை ஒருவழியாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
திடலுக்குள் நுழைய முயன்ற இரண்டாமவர், விளம்பரப் பலகையைத் தாண்டியபோது அவரது கால் தடுக்கியது. லிவர்பூல் ஆட்டக்காரர்கள் மற்றும் அவர்களுடைய நிர்வாகி யர்கன் கிளோப்பிற்கு முன்னால் அவர் விழுந்தார்.
எழுந்த நின்ற அவரை பாதுகாவல் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

