செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
5f37c0f1-06e5-41dc-8765-cd3e177abffb
-

புதிய என்யுஎஸ் கல்லூரிக்கு சிறந்த தொடக்கம்; 400 மாணவர்கள் சேர்ப்பு

யேல்-என்யுஎஸ் கல்லூரி, பல்கலைக்கழக கல்விமான் திட்டம் இணைக்கப்பட்டதில் உருவாகியுள்ள சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் புதிய கல்லூரிக்கு நல்லதொரு தொடக்கம் கிடைத்துள்ளது. ஏறக்குறைய 7,000 விண்ணப்பதாரர்களில் இருந்து 400 மாணவர்கள் இக்கல்லூரியில் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இக்கல்லூரியில் ஏறத்தாழ 300 இடங்கள் சிங்கப்பூரர்களுக்கும் 100 இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு ஆசியான், ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த 100 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் மாணவர்களைப் பொறுத்தவரை பல்வேறு தொடக்கக் கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பயின்ற மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மதரசாக்களில் பயின்ற ஐந்து மாணவர்களுக்கும் இக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த இருவருக்கு புதிய வகை ஓமிக்ரான் தொற்று

வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூர் வந்த இருவரிடம் புதிய வகை ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை பிஏ.2.75 வகை ஓமிக்ரான் துணை கிருமி தொற்றியது தெரியவந்துள்ளது. இருவரும் அண்மையில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர். கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு அவ்விருவரும் உடனடியாக தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டனர். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, நேற்று முன்தினம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.

அவ்விருவரும் முழுமையாக குணமடைந்துள்ளனர். உருமாறிவரும் ஓமிக்ரான் துணை கிருமி, கடந்த மே மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகளில் பிஏ.2.75 துணை கிருமி கண்டறியப்பட்டுள்ளது. பி.ஏ.2.75 துணை கிருமி வேகமாகப் பரவக்கூடும் என்றும் தடுப்பூசி, முந்தைய தொற்றில் இருந்து கிடைத்துள்ள நோயெதிர்ப்பாற்றலில் இருந்து அது தப்பிக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்தத் துணை கிருமி கவலைக்குரிய ஒன்றா என்பது பற்றி இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசி கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டது. முந்தைய ஓமிக்ரான் துணை கிருமிகளுடன் ஒப்புநோக்க, பிஏ.2.75 துணை கிருமி மேலும் கடுமையானது எனக் குறிப்பிடுவதற்கு தற்போது ஆதாரம் எதுவுமில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.

என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 800 மாணவர்களுக்குப் பட்டம்

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) யோங் லூ லின் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட மாணவர்கள், நேற்று தங்கள் இளநிலைப் பட்டக்கல்விச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அதோடு, அக்கல்லூரியைச் சேர்ந்த ஏறக்குறைய 500 மாணவர்கள், முதுநிலைப் பட்டக்கல்விச் சான்றிதழ்களைப் பெற்றனர். மருத்துவர்கள், உயிர்மருத்துவ விஞ்ஞானிகள், சுகாதாரப் பராமரிப்பு நிர்வாகிகள் போன்றோர் அவர்களில் அடங்குவர். என்யுஎஸ் முன்னாள் மாணவரான மனிதவள அமைச்சர் டான் சீ லெங், பட்டக்கல்விச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மருத்துவர்கள் தொடர்ந்து அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும், மருத்துவத் துறையின் பண்புநெறிகளுக்கு உண்மையாக நடக்க வேண்டும், புதிய கண்டுபிடிப்புகளை ஆராய வேண்டும் என்று அமைச்சர் டான் அறிவுறுத்தினார்.

செலவு அதிகரிப்பால் விலையை ஏற்றும் நிர்ப்பந்தத்தில் பண்ணைகள்

மின்சாரக் கட்டண ஏற்றம், செயல்பாட்டு செலவு அதிகரிப்பு போன்றவற்றால் உள்ளூர் பண்ணைகள் நெருக்குதலை உணர்கின்றன. இதனால், தங்கள் உற்பத்திப் பொருள்களின் விலைகளையும் அவை ஏற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. விலை அதிகரிப்பு காரணமாக, தங்கள் உற்பத்திப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சில பண்ணைகள் தெரிவித்துள்ளன. உணவுப் பாதுகாப்புக்கு மிரட்டல் அதிகரித்து இருப்பது இதற்குக் காரணம்.