கொவிட்-19 பரவலால் ஏற்பட்டுள்ள நிலையில்லா சூழலில், அதிகமானவர்கள் முதுமைக் காலத்துக்காக சேமிக்கும் திட்டத்தில் தாமாக முன்வந்து சேர்ந்துள்ளனர்.
துணை ஓய்வூதியத் திட்டத்தில் (எஸ்ஆர்எஸ்) தாங்களாக முன்வந்து கணக்குகளைத் திறந்தவர் களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு கூடியது. வயது குறைந்தவர்கள் அதிகமாக திட்டத்தில் சேர்ந்தனர். செலுத்தப்பட்ட தொகையும் அதிகரித்தது.
கடந்த ஆண்டு 288,793 பேர் துணை ஓய்வூதியத் திட்டத்தில் கணக்குகளை வைத்திருந்தனர் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது. இது 2020ல் இருந்ததைவிட 30 விழுக்காடு அதிகம்.
மேலும் 2021ல், துணை ஓய்வூதியத் திட்டக் கணக்குகளில் மொத்தம் $14.36 பில்லியன் செலுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட தொகையைவிட இது $2.13 பில்லியன் அதிகமாகும்.
அதனுடன், கடந்தாண்டு துணை ஓய்வூதியத் திட்டக் கணக்குகள் வைத்திருந்தவர்களில் 25 விழுக்காட்டினர், 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். ஒப்புநோக்க 2020ல் 19 விழுக்காட்டினர் மட்டுமே அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துணை ஓய்வூதியத் திட்டம், மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள தொகைக்கு அப்பாற்பட்டும் ஓய்வுக்காலத்துக்கு சேமிக்க ஊக்குவிக்கிறது.
துணை ஓய்வூதியத் திட்டத் தில் சேர்வது கட்டாயமில்லை. அது தாமாக முன்வந்து சேரும் திட்டமாகும். துணை ஓய்வூதியத் திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு 0.05 விழுக்காடு வட்டி வழங்கப்படும். ஆனால் அதில் சேமிக்கும் தொகையை முதலீட்டுக்காகவும் மூப்பு தொடர்பான சில குறிப்பிட்ட காப்புறுதித் திட்டங்களுக்காகவும் பயன்படுத்தலாம்.
சேமிக்கும் தொகைமீது வரிக்கழிவும் பெற முடியும். கிருமிப்பரவலால் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால், துணை ஓய்வூதியத் திட்டத்தை அதிகமானோர் தேர்வு செய்திருக்கலாம் என்று கவனிப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

