சிங்கப்பூரில் உள்ள 1.5 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள், தலா பத்து ஏஆர்டி விரைவுப் பரிசோதனைக் கருவிகளைப் பெறவுள்ளன. ஏஆர்டி பரிசோதனைக் கருவிகளின் விநியோகம் நேற்று தொடங்கியது.
சிங்கப்பூரில் கொவிட்-19 அலை மீண்டும் ஏற்பட்டிருக்கும் சூழலில் அரசாங்கம் மூன்றாவது முறையாக பரிசோதனைக் கருவிகளை அரசாங்கம் இலவசமாக வழங்கி வருகிறது.
ஏஆர்டி பரிசோதனைக் கருவி களின் விநியோகம் தொடங்கியிருப்பதை சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று தெரிவித்தார்.
பரிசோதனைக் கருவிகள் மூன்றாம் முறையாக விநியோகிக்கப்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த மாதம் அறிவித்திருந்தார். ஏராளமான வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டியுள்ளதால் சில குடும்பங்கள் சில வாரம் கழித்துதான் ஏர்ஆர்டி பரிசோதனைக் கருவி களைப் பெறக்கூடும் என்று சுகாதார அமைச்சு கடந்த வாரம் கூறியது.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று இது குறித்து பதிவிட்ட திரு ஓங், "சுயபரிசோதனை நம் வாழ்வில் அங்கமாகிவிட்டது. தேவைப்பட்டால் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்," என்று அறிவுறுத்தினார். முதியவர்களையும் நோய் அபாயம் உள்ளவர்களையும் சந்திக்கச் செல்லும் முன்னர் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கூறினார்.
சளி, தொண்டை வலி, காய்ச்சல் போன்ற மூச்சுப் பிரச்சினை தொடர்பான அறிகுறிகள் உள்ளவர்களை தினமும் பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
நோய் அறிகுறிகள் தொடங்கிய சில நாள்களுக்குப் பின்னரே கொவிட்-19 தொற்று உள்ளதா என்று பரிசோதனை காட்டும்.
தற்போதைய அலையைச் சமாளிக்க சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது மிக முக்கியம் என்று திரு ஓங் கூறினார்.

