பெட்ரோல், டீசல் விலை குறைந்தது
எஸ்ஸோ நிறுவனம் கடந்த வாரம் அதன் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்ததை அடுத்து மற்ற எண்ணெய் நிறுவனங்களும் வாரயிறுதியில் அவற்றின் விலையைக் குறைத்துள்ளன.
கெல்டேக்ஸ், ஷெல், சினோபெக் ஆகியவை பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 14 காசும் டீசல் விலையை நான்கு காசும் குறைத்தன என்று பியுஃயல் காக்கி (Fuel Kaki) இணையத்தளம் கூறியது. எஸ்ஸோவும் கடந்த வெள்ளிக்கிழமை இதே அளவு விலையைக் குறைத்திருந்தது. எஸ்பிசி நிறுவனம், பெட்ரோல் விலையை ஒரு லிட்டருக்கு 16 காசும் டீசலை லிட்டருக்கு 7 காசும் குறைத்தது.
இதன் மூலம் சிங்கப்பூரில் டீசல் விலை லிட்டருக்கு $2.93 முதல் $2.98 வரையாக உள்ளது. 92 ஆக்டேன் ரக பெட்ரோலின் விலை லிட்டருக்கு $2.94 முதல் $2.96 ஆக உள்ளது. சிங்கப்பூரில் ஏப்ரல் மாதத்துக்குப் பின்னர் 92 ஆக்டேன் ரக பெட்ரோல் மூன்று வெள்ளிக்குக் கீழே குறைந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
எண்ணெய் சாராத ஏற்றுமதியின் வளர்ச்சி ஜூனில் மெதுவடைந்தது
சிங்கப்பூரின் எண்ணெய் சாராத ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒன்பது விழுக்காடு வளர்ச்சி கண்டது. தொடர்ந்து 19வது மாதமாக எண்ணெய் சாராத ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது.
மே மாதம் காணப்பட்ட வளர்ச்சியைவிட ஜூன் மாதத்தில் வளர்ச்சி மெதுவடைந்தது. 2021 மே மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதத்தில் எண்ணெய் சாரா ஏற்றுமதி 12 விழுக்காடு வளர்ச்சி அடைந்திருந்தது.
மின்னியல் பொருள்களின் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்ததே மெதுவடைவுக்குக் காரணம் என்று கூறப்பட்டது. எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அரசாங்க அமைப்பு இந்தப் புள்ளிவிவரங்களை நேற்று தெரிவித்தது.
ஆனால் புளும்பெர்க் சஞ்சிகை வெளியிட்ட கருத்தாய்வில் பொருளியல் நிபுணர்கள் முன்னுரைத்த 6.1 விழுக்காட்டைவிட எண்ணெய் சாரா ஏற்றுமதி அதிகமாக வளர்ச்சி அடைந்திருந்தது.
கழிவுகளாகும் சூரிய சக்தித் தகடுகள்
சிங்கப்பூர் சூரிய சக்தி பயனீட்டை அதிகரித்து வருவதால், பழைய, வேண்டாத சூரிய சக்தித் தகடுகளைக் கழித்து விடுவது சவாலாக உருவெடுக்க உள்ளது.
சூரிய சக்தித் தகடுகளை முறையாக மறுபயனீடு செய்யாவிட்டால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிங்கப்பூரில் 5,000 டன் வரையிலான சூரிய சக்திக் கழிவுகள் சேரலாம் என்று எட்டாவோல்ட் எனும் சூரிய சக்தித் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ஸ்டான்லி வேங் மதிப்பிட்டார்.
சிங்கப்பூர் வரும் 2030ஆம் ஆண்டுக்குள் அதன் சூரிய சக்திப் பயனீட்டை மும்மடங்காகப் பெருக்கி இரண்டு கிகாவாட்-பீக் அளவுக்கு உயர்த்தத் திட்டமிடுகிறது.
பெரும்பாலும் இங்குள்ள கட்டடக் கூரைகளில் சூரிய சக்தித் தகடுகள் வைக்கப்படுகின்றன. சூரிய சக்தித் தகடுகளை 20 முதல் 25 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். ஆனால் புதிய தொழில்நுட்பங்கள் வரவர, சூரிய சக்தித் தகடுகளை ஏழு முதல் பத்தாண்டுகளில் மாற்ற வேண்டியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

