முன்னாள் கைதிகளுக்கான மறுவாழ்வு நிலையத்தில் சந்தித்த ஒருவர், போலியான 100 வெள்ளி நோட்டுகளை அச்சிடும் யோசனையைச் சொன்னபோது 45 வயது மகதி அப் லத்தீஃப் அதற்கு ஒப்புக்கொண்டார்.
போலியான பணத்தாள்களைப் பயன்படுத்தி கள்ளச் சிகரெட்டுகளை வாங்கலாம் என இருவரும் திட்டமிட்டனர்.
இந்த சதித்திட்டத்தின்கீழ், இருவரும் இணைந்து மொத்தம் 18,500 வெள்ளி மதிப்புள்ள போலி 100 வெள்ளி நோட்டுகளை அச்சிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது வாகன ஓட்டுநராக வேலைபார்த்த மகதி, இந்த நடவடிக்கைக்காக, சாங்கி வட்டாரத்தில் காலியாக இருந்த கிடங்கு ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தந்தார்.
அத்துடன் பேனாக்கத்தியைப் பயன்படுத்தி, போலியான $100 பணத்தாளைக் கத்தரிக்கவும் உதவினார் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரரான இவர்மீது, போலி $100 நோட்டு அச்சிடும் சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான சட்டத்தின்கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.
மூன்று குற்றச்சாட்டுகளையும் மகதி ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து நேற்று இவருக்கு ஆறு ஆண்டுகள், ஒன்பது மாதங்களுக்குச் சிறைத்தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய முகமது ஃபர்ஹான் ஃபருஸ் எனும் ஆடவர், ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று கூறப்பட்டது.
சென்ற ஆண்டு ஜூன் 28க்கும் ஜூலை 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மகதியும் ஃபர்ஹானும் 185 போலியான $100 நோட்டுகளை அச்சிட்டனர்.
ஒரே வழக்கில் இவ்வளவு அதிகமான போலி பணத்தாள்கள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல்முறை என்று காவல்துறை கூறியது.

