முன்னாள் குற்றவாளிகள் தொடர்பில் உள்துறை அமைச்சின் புதிய அணுகுமுறை
குற்றச்செயலில் ஈடுபட்டு சிறைத்தண்டனையை நிறைவேற்றியவர்கள் விடுதலை ஆனதும் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதையும் சிறைசெல்வதையும் நீண்டகாலத்திற்குத் தடுப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று உள்துறை அமைச்சுக்கான இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் தியோ கூறியிருக்கிறார்.
'கேர்' எனப்படும் முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கான சமூக நடவடிக்கைக் கட்டமைப்பு மாநாடு 2022ல் அவர் உரையாற்றினார்.
முன்னாள் குற்றவாளிகள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுப்பதில் இனி கவனம் செலுத்தப்படும் என்றார் அமைச்சர். தற்போது இந்த வரம்பு ஈராண்டாக உள்ளது.
முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்கு அப்பாலும் அவர்களைக் குறித்து சிந்திக்க இது உதவும். நீண்டகால அடிப்படையில் சமூகத்துடனான அவர்களின் மறு ஒருங்கிணைப்பைச் சாத்தியமாகவும் வகைசெய்யும் என்று திருமதி தியோ கூறினார்.
முன்னாள் குற்றவாளிகள் நல்ல வாழ்வைத் தொடங்குவதற்கு உதவுவதில் தற்போது நடப்பில் உள்ள திட்டங்கள் வெற்றியடைந்துள்ளன. இருப்பினும் செய்யவேண்டியவை அதிகம் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குற்றச் செயலில் ஈடுபடாமலிருக்கும் அவர்களின் தன்முனைப்பை நீட்டிக்கவும் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அவர்களுக்கு உதவுவதும் இதில் அடங்கும்.
முதற்கட்டமாக முன்னேற்றம் தென்பட்டாலும் முன்னாள் குற்றவாளிகள் பலர் நம் அனைவரையும் போன்றே வாழ்வில் ஏமாற்றத்தையும் பின்னடைவையும் சந்திப்பர். தொடர்ந்து செயல்படுவதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமம் என்று நம் அனைவருக்கும் தெரியும் என்பதை அமைச்சர் தியோ சுட்டினார்.
'கேர்' கட்டமைப்பு ஏற்கெனவே இதன் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவருகிறது. பிள்ளைகளைப் பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பெண் குற்றவாளிகள் விடுதலை ஆனபிறகு, வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் 'ஏஎம்பி சிங்கப்பூர்' அமைப்பு ஆதரவளிப்பதை திருமதி தியோ எடுத்துரைத்தார். இதுவரை 38 பேர் இதனால் பலனடைந்துள்ளனர்.

