10 கிலோ மீட்டர் நீள எம்ஆர்டி
பாதையில் இரைச்சல் தடுப்புகள்
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில்பாதைகளில் 27 கிலோமீட்டருக்கு இரைச்சல் தடுப்புக் கட்டமைப்பை நிறுவும் பணிகளின் இரண்டாம் கட்டம் (10 கி.மீ.) நிறைவுபெற்றுள்ளது.
அங் மோ கியோ, புக்கிட் பாத்தோக், போன விஸ்தா உள்ளிட்ட 20 இடங்களில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு இதனால் ரயில்கள் கடக்கும்போது ஏற்படும் இரைச்சல் குறையும்.
இதுவரை மொத்தம் 21.5 கிலோமீட்டர் தொலைவிற்கு இரைச்சல் தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. எஞ்சிய 5.5 கிமீ தொலைவுக்கு இந்தக் கட்டமைப்பை அமைக்கும் பணி 2024 இறுதிக்குள் நிறைவடையும்.
துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி; அறிவியல் பாடம், தேர்வு மாற்றம்
ஒன்பது அல்லது பத்து வயதாக இருந்தபோது குடும்ப நண்பரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி கடுமையான மனச் சிக்கலை எதிர்நோக்கினார்.
தற்போது 17 வயதாகும் இவர், 2015ல் நடந்த துன்புறுத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சி, மன அழுத்தம் ஆகியவற்றால் இன்னும் சிரமப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதில் தொடர்புடைய 60 வயது ஆடவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
இவருக்கு 11 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கும்போது மேலும் ஐந்து குற்றச்சாட்டுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மணவிலக்கு பெற்றதால், தாய்வழிப் பாட்டியுடன் வசித்த காலத்தில் ஆடவர் அவரைத் துன்புறுத்தினார்.
உயர்நிலைப் பள்ளி முதலாம் ஆண்டில் பாலியல் கல்வி வகுப்பில் பாலியல் துன்புறுத்தல் குறித்து கலந்துரையாடப்பட்டபோது மனம் உடைந்த சிறுமி ஆசிரியரிடமும் பள்ளி ஆலோசகரிடமும் தனக்கு நேர்ந்ததைப் பகிர்ந்துகொண்டார்.
விவரம் தந்தைக்குத் தெரிவிக்கப்படவே அவர் காவல்துறையிடம் புகாரளித்தார். சிறுமியின் மனநிலையைக் கருத்தில்கொண்டு மனித இனப்பெருக்கம் தொடர்பான பாட வகுப்புகளைத் தவிர்க்கவும் இவருக்காக அறிவியல் தேர்வுத்தாளை மாற்றியமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

