ஹுவா சோங் கல்விக் கழகத்தின் ஆசிரியர் பாலியல் கல்வி வகுப்பில் பாரபட்சமான தகவல்களைத் தந்ததற்காக பள்ளி அவரைக் கண்டித்துள்ளது. இத்தகைய வகுப்பு எடுக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்காக அவர் தயாரித்த படைப்பின் கருத்தைப் பள்ளி அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
சென்ற புதன்கிழமை நடந்த சம்பவம் குறித்துப் பள்ளி நிர்வாகம் அறிந்திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்கு நேற்று பதிலளித்த பள்ளியின் பேச்சாளர் குறிபிப்ட்டார்.
கல்வி அமைச்சின் பாலியல் கல்விப் பாடத்திட்ட வரையறுக்கு அப்பாற்பட்ட உள்ளடக்கம் அந்த ஆசிரியரின் படைப்பில் இடம்பெற்றிருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆசிரியர் அன்று பகிர்ந்துகொண்டவை அவரது சொந்தக் கருத்துகள்; பள்ளி அல்லது கல்வி அமைச்சின் கருத்துகளை அவை பிரதிபலிக்கவில்லை என்று அவர் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் பள்ளியின் ஆலோசகர்; அவர் உயர்நிலைப் பள்ளி நான்காம் வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் எடுத்ததாகக் கூறப்பட்டது.
அவரது படைப்பின் ஓர் அங்கத்தில் 'எல்ஜிபிடிகியூ' எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள், அறுவைச் சிகிச்சை மூலம் பாலினத்தை மாற்றிக்கொண்டவர்கள் போன்றோர் குறித்த எதிர்மறையான கருத்துகள் இடம்பெற்றிருந்தன.
இந்தச் சம்பவத்தைத் தீவிரமாகக் கருதுவதாகவும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பேச்சாளர் கூறினார்.
இத்தகைய புனைந்துரைக்கப்பட்ட தகவல்கள் 'எல்ஜிபிடிகியூ' சமூகத்தினர் குறித்த பயம், அவமானம் போன்ற உணர்வுகளை விதைக்கும் என்று 'பிங்க்டாட்எஸ்ஜி' அமைப்பு கூறியது.