'கியூசன் கிச்சன் எக்யூப்மெண்ட்' எனும் உள்ளூர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சேலி சுவா, வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கில் 100,000 வெள்ளி நன்கொடை வழங்கியுள்ளார்.
'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பள்ளி கைச்செலவு' அறநிதிக்கு நேற்று அவர் இந்த நன்கொடையை வழங்கினார்.
பிள்ளைகள் கல்வி கற்க உதவுவதே தமது நோக்கம் என்று கூறிய திருவாட்டி சுவா, வறுமைச் சூழலில் இருந்து மீள கல்விதான் சிறந்த வழி என்று குறிப்பிட்டார்.
சிறுவயதில், குடும்பத்தின் வறுமை காரணமாகத் தம்மால் உயர்கல்வி கற்க இயலவில்லை என்பதை நினைவுகூர்ந்த திருவாட்டி சேலி சுவா, 1996ஆம் ஆண்டு முதல் சமையலுக்குத் தேவையான கருவிகளை விற்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
'கியூசன்' நிறுவனத்தின் ஊழியர்கள் 200 பேரும் சமூகத்திற்கு உதவும் நன்கொடை போன்ற நடவடிக்கைகளில் பங்களிப்பதாக திருவாட்டி சுவா கூறினார்.
'எஸ்டி பள்ளி கைச்செலவு' அறநிதி ஒவ்வோர் ஆண்டும் வசதிகுறைந்த குடும்பங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 10,000 மாணவர்களுக்கு, பள்ளியில் உணவு வாங்குவது உள்ளிட்ட செலவுகளுக்கு உதவித்தொகை வழங்குகிறது.

