'ஸ்டிரைட்ஸ்' நிறுவனத்தின் 'லிமோசின்' சொகுசு வாடகை கார்களுக்கு ஓட்டுநர்கள் செலுத்தவேண்டிய கட்டணம் உயர்ந்திருப்பதால் இவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் இந்தக் கட்டணம் மூன்று முறை உயர்த்தப்பட்டதால் கிட்டத்தட்ட 90 ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய கட்டணம் கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முந்தைய கட்டணத்தைக் காட்டிலும் அதிகம் என்று இவர்கள் கூறினர்.
கிருமிப்பரவலுக்கு முன்னர் டொயோட்டா வெல்ஃபையர் ரக காருக்கு நாளொன்றுக்கு 150 வெள்ளி செலுத்த வேண்டும். இப்போது இது 160.50 வெள்ளியாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் இது மேலும் உயரக்கூடுமென்றும் மற்ற வாடகை கார் நிறுவனங்களும் இவ்வாறே ஓட்டுநர்களுக்கான கட்டணத்தை உயர்த்தக்கூடும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டது.

