சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு புதிய தலைவர்
பேராசிரியர் டான் டாய் யோங் (படம்), சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டு
உள்ளார். இவர் 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்தப் பொறுப்பை ஏற்பார்.
பேராசிரியர் டான், இதற்கு முன்னர் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யேல்-என்யுஎஸ் கல்லூரித் தலைவராகப் பணியாற்றியவர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் பெற்ற இவர், சிங்கப்பூர் தேசிய அரும்பொருளகத்தின் கௌரவத் தலைவர், சிங்கப்பூர் நிறுவனர் நினைவிடக் குழுவின் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உயர் பொறுப்புகளை வகிக்கிறார். முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் டான் பல்வேறு தேசிய தின விருதுகளையும் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரில் தலைமையகம் அமைத்திருக்கும் 'ஃபுட்பாண்டா'
உணவு விநியோகச் சேவை வழங்கும் 'ஃபுட்பாண்டா' நிறுவனம், சிங்கப்பூரை அதன் தலைமையகமாகக் கொண்டு செயல்படவிருப்பதாக அறிவித்துள்ளது.
இங்குள்ள அதன் அலுவலகத்தில் 1,200 ஊழியர்கள் வேலைசெய்கின்றனர். இவர்கள் உள்ளூர், வட்டாரச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
நேற்றைய நிகழ்ச்சியில், 'பவர்அப்! டெக் அகெடமி' எனும் ஊழியர் திறன் மேம்பாட்டுக்கான புதிய கல்வி நிலையம் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
அரசாங்கம், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றின் பங்காளித்துவத்துடன் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகளை இந்த நிலையம் நடத்தும்.
சிங்கப்பூர் அலுவலகத்துக்கான புதிய நிர்வாக இயக்குநராகத் திரு லாரன்ஸ் வென் நேற்று அறிவிக்கப்பட்டார். உணவு, பானத் துறையில் இவருக்கு 15 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் உண்டு.

