சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) சில குறிப்பிட்ட பட்ட மேற்படிப்புப் பாடங்களுக்கான கட்டணத்தில் அடுத்த ஆண்டு முதல், 10 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாங்கத்தால் ஏற்கெனவே மானியம் வழங்கப்படாத எல்லாப் பாடங்களுக்கும் இந்தக் கட்டணக் கழிவு பொருந்தும். அந்த வகையில் கிட்டத்தட்ட 70 பாடங்களைப் படிக்க உதவி கிடைக்கும்.
என்யுஎஸ் பட்டதாரிகளுக்கு மேலும் ஐந்து விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்றும் என்யுஎஸ் நேற்று தெரிவித்தது.
கல்வி, அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடத்திட்டங்களும் மின்னிலக்க நிதித் தொழில்நுட்ப அறிவியல் முதுநிலைப் பட்டம் போன்ற படிப்புகளும் கட்டணக் கழிவுக்கான பட்டியலில் அடங்கும்.
என்யுஎஸ் நேற்று நடத்திய வாழ்நாள் கற்றல் விழா தொடக்க நிகழ்வில் இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. கென்ட் ரிட்ஜ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், குழு விவாதங்கள், முதுநிலை வகுப்புகள் உள்ளிட்டவற்றில் பங்கேற்க 2,500க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.
நிகழ்வில் 220 பேர் நேரடியாகப் பங்கேற்றனர். கல்வி அமைச்சர் சான் சுன் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். முன்னாள் என்யுஎஸ் மாணவர்களும் தொழில்துறைத் தலைவர்களும் பங்கேற்பாளர்களில் அடங்குவர்.
மாணவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் கல்வியை எந்தவொரு கல்விநிலையத்திலும் தேர்ந்தெடுக்கும் முறையை சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்கள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் வகுக்க வேண்டும் என்று திரு சான் தமது உரையில் வலியுறுத்தினார்.
மேலும், திறன்களை மேம்படுத்தி, பொருத்தமான பணிகளைத் தொடர ஊழியரணிக்கு வாய்ப்புகள் வழங்கு வதில் தனது பங்கை ஆற்ற எல்லா பல்கலைக்கழகங்களுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
முன்னாள் மாணவர்களோடு வாழ்நாள் முழுவதும் தொடர்பில் இருக்கும் வகையில் அவர்களுட னான உறவை பல்கலைக்கழகங்கள் நிர்வகிக்கவும் திரு சான் விருப்பம் தெரிவித்தார்.
என்யுஎஸ் தனது கைப்பேசிச் செயலியை புதுப்பித்து வெளியிட் டுள்ளது. பிரபலமான வேலைகளில் சேர தங்களுக்கு எந்தவிதமான தகுதிக் குறைச்சல் உள்ளது என் பதைக் கண்டறிய பட்டதாரிகளுக்கு இச்செயலி உதவுகிறது.

