சிங்கப்பூரில் சாப்பிடுவதற்காக வாங்கிய 'சேண்ட்விச்'சை ஆஸ்திரேலிய குடிநுழைவு அதிகாரி
களிடம் அறிவிக்க மறந்ததற்காக பெண் ஒருவர் $2,500 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெசிகா லீ, 19, எனப்படும் அந்தப் பெண் இதுதொடர்பாக ஜூலை 1ஆம் தேதி 'டிக்டாக்'கில் பதிவு (படம்) ஒன்றை வெளியிட்டார்.
ஐரோப்பாவில் இருந்து தமது சொந்த நகரான பெர்த்துக்கு 11 மணி நேரம் பயணம் செய்ய வேண்டி இருந்ததாகவும் இடைநிறுத்தமாக சிங்கப்பூரில் இறங்கியபோது சாங்கி விமான நிலையத்தில் 'சப்வே' விரைவு உண
வகத்தில் 'சேண்ட்விச்' வாங்கியதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் ஓரடி நீளமுள்ள 'சேண்ட்விச்'சில் பாதியை உண்ட பின் மீதியை பெட்டிக்குள் வைத்ததாகவும் ஆஸ்திரேலியாவில் இறங்கியதும் அதுபற்றி குடிநுழைவு அனுமதித் தாளில் அறிவிக்க மறந்துவிட்டதாகவும் அந்தப் பெண் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்குள் உணவைக் கொண்டு செல்பவர்கள் அதுபற்றி அறிவிக்க வேண்டியது கட்டாயம்.
இதனைச் செய்யத் தவறிய ஜெசிகா லீக்கு 2,664 ஆஸ்திரேலிய டாலர் (S$2,535) அபராதம் விதிக்கப்பட்டது. தமது வேலையைக் கைவிட்ட நிலையில் வீட்டு வாடகை செலுத்த வேண்டிய நேரத்தில் இந்த அபராதம் தமக்கு விதிக்கப்பட்டதாக வருத்தத்துடன் அவர் தெரிவித்துள்ளார்.

