வாகன நடமாட்டத் துறையில் புத்தாக்கத்தை ஊக்குவிக்க புதிய பங்காளித்துவம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தானியக்க மற்றும் வாகனத் துறைகளில் தொழில் தொடங்குவோர் இந்தப் பங்காளித்துவ அமைப்பின் துணையோடு புத்தாக்கத்தையும் வணிகமயமாக்கலையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
'எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்' அரசாங்க அமைப்பும் 'காண்டினெண்டல்' என்னும் ஜெர்மானிய வாகன நிறுவனமும் இணைந்து 'கோ-பேஸ்' என்னும் பங்காளித்துவ அமைப்பைத் தொடங்கி உள்ளன.
சிங்கப்பூரிலும் சீனா தவிர்த்த இதர ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் புத்தாக்கத் தொழில்முனைவோரை உருவாக்க இந்த அமைப்பு உதவும்.
ஓட்டுநர் இல்லாத தானியக்க வாகனம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் இணைந்து இந்த அமைப்பு செயல்படும். பயிற்சி காலத்தில் இந்நிறுவனங்களுக்கு இது உதவும்.
சிறிய, நடுத்தர நிறுவனங்களும் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களும் சந்தையின் அனு
கூலன்களைப் பெறவும் காண்டினெண்டல் நிறுவனத்தின் வளங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் இந்தப் பங்காளித்துவ அமைப்பு அனுமதிக்கும்.
பயிற்சி நிறைவுக்குப் பின்னர், காண்டினெண்டல் நிறுவன வர்த்தகத்தில் இணைந்து விநியோகிப்பாளர் ஆகலாம். ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் பணிகளில் இணைந்து செயல்பட அந்நிறுவனத்தோடு பங்காளித்துவம் செய்துகொள்ளலாம்.
'கோ-பேஸ்' பங்காளித்துவ அமைப்பு அமெரிக்கா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளில் செயல்
படுகிறது.
சிங்கப்பூரின் வாகனத் துறையில் தொழில் தொடங்கும் உள்ளூர் நிறுவனங்கள் கணினி மென்பொருள், வன்பொருள் திறன்களுடன் உலக அளவிலான விநியோகத் தொடரில் நுழைய இந்த அமைப்பு கைகொடுக்கும்.

