இந்த வட்டாரத்தில் சில நாடுகள் போதைப்பொருள் சட்டங்களைத் தளர்த்தும்போது அதற்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டம் மேலும் சவாலாவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
போதைப்பொருள் சட்டங்களின் தொடர்பில் சற்றும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதே சிங்கப்பூரின் அணுகுமுறை.
நல்ல வேளையாக அதற்குப் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதோடு, போதைப்பொருள் விவகாரத்தைக் கட்டுக்குள் வைக்காத சமுதாயங்கள் எதிர்கொள்ளக்கூடிய பின்விளைவுகளைப் பற்றித் தெரியப்படுத்தும் முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்து எடுக்கும் என்றும் அவர் சொன்னார்.
ஒன்எஃப்எம் 91.3 வானொலி நிலையத்தின் 'தி பிக் ஷோ' நிகழ்ச்சியில் புதன்கிழமையன்று (20 ஜூலை) திரு சண்முகம் பேசினார்.
"நாம் எடுக்கும் முடிவுகளை வெளிப்படையாகத் தெரிவித்து இளையர்கள் உள்பட மக்களுக்குப் புரியவைப்பது மிகவும் முக்கியம். அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் ஏற்ற முடிவுகளை நாம் எடுக்கவேண்டும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும்," என்று திரு சண்முகம் சொன்னார்.
மருத்துவ ரீதியான காரணங்களுக்கு கஞ்சாவைப் பயன்படுத்த மலேசியா சென்ற ஆண்டு அனுமதி வழங்கியது.
போதைப்பொருள் பட்டியலிலிருந்து தாய்லாந்து கஞ்சாவை அண்மையில் அகற்றியது.
எனினும், அந்நாட்டில் பொது இடங்களில் கஞ்சா உபயோகிப்பது சட்டவிரோதமானது.
வட்டார நாடுகளில் பலரிடையே போதைப்பொருள் பழக்கம் இருப்பதால் அதற்கு எதிரான சட்டங்களைச் செயல்படுத்துவது சிரமமாக இருந்து வருகிறது;
ஆனால் சிங்கப்பூரில் அந்தப் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் சண்முகம் சுட்டினார்.

