வாரந்தோறும் சில நாள்களில் 30லிருந்து 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்கிறார் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம்.
வானொலி நேர்காணல் நடைபெறும்போதுகூட தேவைப்பட்டால் அதற்கு நேரம் வைத்துக்கொள்கிறார்.
அதை நிரூபிக்கும் வகையில் ஒன்எஃஎம் 91.3 வானொலி நிலையத்தில் தாம் கலந்துகொண்ட நேர்காணலுக்குத் திரு சண்முகம் 'டம்பெல்' எனப்படும் உடற்பயிற்சி செய்வதற்கான சில கிலோகிராம் எடைகொண்ட சாதனத்தை எடுத்துச்சென்றார்.
வானொலி படைப்பாளர்கள் ஏஞ்சலீக் டியோ, 'ஃபிளையிங் டட்ச்மன்' என்றழைக்கப்படும் மார்க் வேன் கைலன்பெர்க் ஆகியோருடன் அவர் 'டம்பெல்'லை ஏந்தியபடி தோப்புக்கரணத்தைப் போல் இருக்கும் 'ஸ்குவாட்ஸ்' பயிற்சியில் ஈடுபட்டார்.
அதற்குப் பிறகு 'புஷ்-அப்ஸ்' உடற்பயிற்சியையும் மேற்கொண்டார்.
உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு சண்முகம், எவ்வளவு வேலை இருந்தாலும் வாரந்தோறும் சில நாள்களில் உடற்பயிற்சி செய்வதாகத் தெரிவித்தார்.
பிறரை ஊக்குவிக்க தாம் உடற்பயிற்சி செய்வது பதிவான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
திரு சண்முகத்தின் உடற்பயிற்சி நடவடிக்கைகள், போதைப்பொருளுக்கு எதிராக சிங்கப்பூரின் கடுமையான அணுகுமுறை ஆகியவற்றின் தொடர்பில் ஒன்எஃஎம் 91.3ல் புதன்கிழமையன்று (20 ஜூலை) நேர்காணல் நடைபெற்றது.

