ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அரசாங்க அமைப்பு, அதன் நிதியுதவித் திட்டங்களில் ஏற்பட்ட குளறுபடியால், தவறுதலாக $4.22 மில்லியன் மதிப்பிலான கூடுதல் நிதியுதவி அளித்துள்ளது.
அரசாங்கக் கணக்குகளை ஒவ்வோர் ஆண்டும் சரிபார்க்கும் தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம், 2021/2022 நிதியாண்டுக்கான அரசாங்கக் கணக்காய்வு அறிக்கையை நேற்று வெளியிட்டபோது இதைத் தெரிவித்தது.
திறன்மேம்பாட்டு தீர்வை நிதியைப் பெறுவதில் அமைப்பு 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை மெத்தனமாக இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால் இவ்வாண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்புக்கு $43 மில்லியன் திருப்பிக் கிடைக்க வேண்டியுள்ளது.
அரசாங்கம், மூன்று அரசு சார்ந்த அமைப்புகள், நான்கு அரசு சார்ந்த நிறுவனங்கள், மேலும் இரண்டு கணக்குகள் ஆகியவற்றின் நிதி அறிக்கைகள் பற்றி மாற்றப்படாத கணக்காய்வுக் கருத்தை அது தந்தது. அரசாங்கக் கணக்குகளின் நிதி அறிக்கை நிறைவுதந்ததாகவும் கணக்காய்வுத் தர விதிமுறைகளுக்கு ஏற்பட அவை இருந்ததாகவும் இது பொருள்படும்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பின் நிதியுதவித் திட்டங்கள் நிர்வகிக்கப்பட்ட முறையில் ஏற்பட்ட தவறுகளை தலைமைக் கணக்காய்வாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியது.
தகுதிபெற்றவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதைச் சரியாக கண்காணிக்காதது அவற்றில் ஒன்று. பயிற்சி அளித்த நிறுவனங்கள் சமர்ப்பித்த நிதி கோரிக்கைகளை போதிய அளவில் சரிபார்க்காதது மற்றொரு தவறாகும்.
மோசடி நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தால் நிதியுதவி பெற அனுமதியில்லாத நிறுவனங்களுக்கும் உதவி தரப்பட்டது.
தவறுகளைச் சரிசெய்ய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டது.