செம்பவாங்கில் திறக்கப்பட்டுள்ள புதிய சிறுநீரக சுத்திகரிப்பு நிலையத்துக்குச் செல்லும் நோயாளிகள் நான்கு மணிநேர சுத்திகரிப்பு சிகிச்சையின்போது கைக்கணினிகளைப் பயன்படுத்தவும் உடற்பயிற்சி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் நாற்காலியில் அமர்ந்தபடியே அவற்றில் ஈடுபடலாம்.
புதிய சான் வாங் வூ டி - கேடிஎஃப் சிறுநீரக சுத்திகரிப்பு நிலையம் அட்மிரல்டி லிங்கில் அமைந்துள்ளது. சிறுநீரக சுத்திகரிப்பு அறக்கட்டளை (கேடிஎஃப்) அதைத் திறந்துள்ளது. சான் வாங் வூ டி அதற்கான நிதியை வழங்கியது.
நிலையத்தில் 19 எச்டிஎஃப் சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன. எந்த ஒரு நேரத்திலும் அங்கு 114 நோயாளிகள் சிகிச்சை பெற முடியும். எச்டிஎஃப் முறை மேம்பட்ட சிறுநீரக சுத்திகரிப்பு முறையாகும். சிறுநீரக சுத்திகரிப்பால் இரத்த அழுத்தத்தில் ஏற் படக்கூடிய ஏற்ற இறக்கம், தசை குறைபாடு போன்ற பக்கவிளைவுகளை அது குறைக்க உதவும்.
கைக்கணினிகள், உடற்பயிற்சி வழங்கும் முன்னோடித் திட்டம் இங்கு வெற்றியடைந்தால் கேடிஎஃப் அதை தனது மற்ற மூன்று நிலையங்களில் அறிமுகப்படுத்தக்கூடும்.

