மீண்டும் கூடிய 'சிஓஇ' கட்டணங்கள்
வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் (சிஓஇ) எல்லா பிரிவுகளிலும் நேற்றைய ஏலக்குத்தகையில் கூடியுள்ளன. பொதுப் பிரிவுக் கட்டணம் தொடர்ந்து இரண்டாவது முறையாக புதிய உச்சத்தைத் தொட்டது.
பெரும்பாலும் பெரிய கார்களுக்காக பயன்படுத்தப்படும் பொதுப்பிரிவில் கட்டணங்கள் 3.1 விழுக்காடு கூடி $114,001ஆனது. முந்திய கட்டணம் $110,524ஆக இருந்தது.
பெரிய கார்களுக்கான பிரிவில் கட்டணம் $107,800லிருந்து $110,003 ஆக உயர்ந்தது. இது இரண்டு விழுக்காடு உயர்வாகும்.
சிறிய கார்களுக்குமான சிஓஇ, 1.2 விழுக்காடு கூடி $78,899ஆக அதிகரித்தது. இது முன்பு $78,001ஆக இருந்தது. வர்த்தக வாகனங்களின் சிஓஇ, $54,001லிருந்து $54,889 ஆக அதிகரித்தது. இது 1.6 விழுக்காடு உயர்வாகும்.
மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ, $21 அதிகரித்து $10,889லிருந்து $10,910 ஆக கூடியது.
சக்திவாய்ந்த சிங்கப்பூர் பாஸ்போர்ட்
முன்கூட்டியே விசா பெறாமல் பயணம் செய்யக்கூடிய சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளின் (பாஸ்போர்ட்) பட்டியலில் சிங்கப்பூருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் வெளியிடும் உலகளாவிய குடியுரிமை, வசிப்பிடம் தொடர்பான குறியீட்டில் இது தெரிய வந்துள்ளது. சிங்கப்பூர் கடவுச்சீட்டைக் கொண்டு உலகின் 192 நாடுகளுக்கு விசா அனுமதி இல்லாமல் பயணம் செல்லலாம். தென்கொரியா இரண்டாம் இடத்தை சிங்கப்பூருடன் பகிர்ந்துகொண்டது.
குறியீட்டில் ஜப்பான் முதல் இடத்தை பிடித்தது. ஜப்பானிய கடவுச்சீட்டை வைத்து 193 நாடுகளுக்கு விசா பெறாமல் செல்ல முடியும். கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட குறியீட்டில் சிங்கப்பூரும் ஜப்பானும் கூட்டாக முதலிடத்தில் இடம்பெற்றிருந்தன.
கனமழையால் தணிந்த வெப்பம்
சிங்கப்பூரின் சில குறிப்பிட்ட இடங்களில் நேற்று காலை கனமழை பெய்தது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய கனமழை, பத்து மணிக்குள் தூறலாக மாறியது.
கனமழையால் பல நாள் நீடித்த வெப்பம் தணிந்தது. நாள் முழுவதும் மேகமூட்டமாக இருக்கும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு நேற்று தெரிவித்தது.
ஜூலை மாதக் கடைசியில் மழை பெய்யும் என்று எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு நிலையம் கடந்த வாரம் கூறியிருந்தது. முற்பகலிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய சிறிது மழை பெய்யக்கூடும் என்று அது கூறியது.
கெப்பல் 'கிளப்பில்' அகழாய்வு
கெப்பல் கிளப் வளாகத்தில் இவ்வாண்டு பிற்பகுதியில் அகழாய்வு தொடங்கப்படும். அகழாய்வை முடித்த பின்னர் அந்த இடத்தில் குடியிருப்புப் பேட்டை கட்டப்படும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, அகழாய்வு பற்றி நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார்.
தேசிய மரபுடைமைக் கழகம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை இணைந்து அகழாய்வுக்கு உத்தரவிடும். அகழாய்வு அந்த இடத்தின் வரலாற்றுப் பங்கையும் முக்கியத்துவத்தையும் பற்றிய புரிதலை மேம்படுத்தும் என்றார் திரு லீ.
48 ஹெக்டர் உள்ள முன்னைய 'கெப்பல் கிளப்' இடத்தில் 6,000 அரசாங்க வீடுகள் உள்ளிட்ட 9,000க்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
தொல்லை தந்த இளம்பெண்
கடந்த 2020ல் தனது அப்போதைய அண்டைவீட்டாருக்கு எதிராக குறும்புச் செயலில் ஈடுபட்ட ஓர் இளம்பெண்ணுக்கு பகல்நேரக் கண்காணிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஜாஸ்மின் லாவ் ஜியே மின்னுக்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது அவருக்கு வயது 18. சிங்கப்பூர் சிறைச்சாலை துறை நடத்தும் பகல்நேர கண்காணிப்பு நிலையத்துக்கு அவர் அனுப்பப்பட்டார். அத்தகைய நிலையங்களுக்குப் பகலில் கண்காணிப்பு, ஆலோசனை ஆகியவை வழங்கப்படும். ஆனால் சென்ற ஆண்டு அவர் வேறொரு வீட்டுக்குத் தொல்லை தந்தார். தொல்லை, குறும்புச்செயல், திருட்டு உள்ளிட்ட ஆறு குற்றங்களை லாவ் ஒப்புக்கொண்டார். அவருக்கு நேற்று குறைந்தது ஆறு மாதகால சீர்திருத்தப் பயிற்சி விதிக்கப்பட்டது.

