மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (சிஎன்பி) அண்மைய சம்பவம் ஒன்றை தனது ஃபேஸ் புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சிஎன்பி அதிகாரிகள் 11வது மாடியிலுள்ள ஒரு வீட்டை சோதனையிடச் சென்றபோது அங்கிருந்த ஏழு மாத கர்ப்பிணி ஒருவர் சன்னல் வழியாக வெளியேறினார். 8வது மாடியின் வெளியே குளிரூட்டி தாங்கியின் விளிம்பின் அருகே அந்தப் பெண் இறங்கியதை அதிகாரிகள் கண்டனர். உடனடியாக மாடிப்படி வழியே சென்ற அதிகாரி ஒருவர், அப் பெண்ணை சமாதானப்படுத்தினார். தொடர்ந்து, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையால் அந்தப் பெண் மீட்கப்பட்டார். கர்ப்பிணி என்பதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல்நிலையை உறுதி செய்த பின்னர், வீட்டுக்குள் அதிகாரிகள் நுழைந்தனர். உள்ளே போதைப்பொருள்களின் அருகே ஏழு வயது சிறுவனை அவர்கள் கண்டனர். உறவினர்களிடம் அச்சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். போதைப் புழங்கி, குழந்தை, அதிகாரிகள் அனைவரும் சம்பந்தப்பட்ட மனதை உலுக்கும் சம்பவம் இது என சிஎன்பி கூறியது.

