சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும், மோசடிச் சம்பவங்கள், மோசடித் தொலைபேசி அழைப்புகள், மோசடிக் குறுந்தகவல்கள் தொடர்பான விசாரணையில் இருதரப்பு ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன.
இருநாட்டு தொடர்பு, ஊடக ஆணையங்களுக்கு இடையே நேற்று இதன் தொடர்பில் உடன்பாடு கையெழுத்தானது. இருதரப்பும் இத்தகைய மோசடிகளைக் கையாள்வது குறித்த தொழில்நுட்ப அறிவு, நிபுணத்துவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ள இது வகைசெய்யும்.
தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையத் தலைமை நிர்வாகி லியூ சுவென் ஹோங்கும் ஆஸ்திரேலிய தொடர்பு, ஊடக ஆணையத்தின் தலைவர் நெரிடா ஓ'லாஃப்லினும் சென்ற திங்கட்கிழமை புரிந்துணர்வுக் குறிப்பில் கையொப்பமிட்டதாகக் கூறப்பட்டது.
இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதுடன் இரு நாட்டுப் பொருளியல் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும் இதன் நோக்கம் என்று சிங்கப்பூரின் தகவல்தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் கூறியது.
எல்லை தாண்டிய மோசடிச் செயல்களைக் கையாளுவதில் இது முக்கியப் படி என்று திரு லியூ குறிப்பிட்டார்.
குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் தேவையற்ற குறுந்தகவல்கள், தொலைபேசி அழைப்புகள் போன்றவற்றால் ஏற்படும் தாக்கத்தைத் திருவாட்டி ஓ'லாஃப்லின் சுட்டினார். இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த இந்த உடன்பாடு உதவும் என்றார் அவர்.

