அரசாங்க ஊழியர்கள் சிலரின் மாதாந்தர பரிவர்த்தனை அறிக்கையில், சம்பளம் என்பதற்குப் பதில் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை என்று தவறுதலான குறிப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் மாதச் சம்பளம் தொடர்பில் வழங்கப்படும் கூடுதல் வட்டி விகிதச் சலுகை கிடைக்காதோ என்று பாதிக்கப்பட்ட சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.
கல்வி அமைச்சு, கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஆகியவற்றின் ஊழியர்களும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
வங்கிப் பரிவர்த்தனைக் குறியீட்டைத் திருத்துவது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கச் சேவைப் பிரிவு தெரிவித்தது.
சம்பளம் சரியாக நிரப்பப்பட்டிருப்பதால் சலுகை குறித்து அதிகம் கவலைப்படவில்லை என்று சில ஊழியர்கள் கூறினர்.
இத்தகைய சலுகையைப் பெற, பரிவர்த்தனைக் குறிப்பில் 'சம்பளம்' என்று குறிப்பிடப்படுவது அவசியம். பாதிக்கப்பட்டோரின் சம்பளத்துக்கு இச்சலுகை கிடைப்பது உறுதிசெய்யப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்ட சில வங்கிகள் உறுதி அளித்தன.

