'மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்' செயலிழப்பு
'மைக்ரோசாஃப்ட்' நிறுவனத்தின் 'மைக்ரோசாஃப்ட் டீம்ஸ்' தொடர்புத் தளம் உலகெங்கும் நேற்று முடங்கியது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்றுக் காலை ஒன்பது மணியிலிருந்து உலகெங்கும் உள்ள பயனாளர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்த இயலவில்லை. நேற்றுக் காலை 9.47 மணிக்கு நிறுவனம் இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டது.
நேற்றுக் காலை 9.49க்கு 3,200க்கும் மேற்பட்டோர் சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டதாக 'டௌன்டிடெக்டர்.காம்' தகவல் வெளியிட்டது. இதேநேரத்தில் அமெரிக்காவில் 4,800க்கும் அதிகமானோரும் ஜப்பானில் 18,200க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
'ஆஃபிஸ் 365' மென்பொருள் தொகுப்பும் நேற்று செயல்படவில்லை என்று பயனாளர்கள் கூறினர்.
மீண்டும் இடம்பெறவிருக்கிறது சிங்கப்பூர் இரவுத் திருவிழா
ஈராண்டுக்குப் பிறகு மீண்டும் இடம்பெறவிருக்கிறது சிங்கப்பூர் இரவுத் திருவிழா.
அடுத்த மாதம் 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரத்தில் இது நடைபெறும். மறுபிறப்பு எனப் பொருள்படும் 'ரீபெர்த்' என்பது 13வது முறையாக நடைபெறும் இவ்விழாவின் கருப்பொருள்.
கொவிட்-19 நோய்ப்பரவலின் தாக்கத்திலிருந்து சிங்கப்பூர் மீண்டுவந்துள்ள நிலையில் இது பொருத்தமான கருப்பொருள் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
தேசிய மரபுடைமைக் கழகம் நடத்தும் விழாவில் இம்முறை 55க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இதில் கண்டுகளிக்கலாம். பிராஸ் பாஸா-பூகிஸ் வட்டாரம் குறித்து அதிகம் அறியப்படாத தகவல்களைப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இவை அமைந்திருக்கும்.

