எவர்கிரீன் உயர்நிலைப் பள்ளிக்கு நேற்றுக் காலை விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் பொய்யானது என்று காவல்துறை கண்டறிந்ததாக கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
அமைச்சர் இதுகுறித்து நேற்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
சம்பவத்தின் தொடர்பில் பதின்ம வயதுச் சிறுவன் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறை கூறியது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்துப் பள்ளி நிர்வாகம் நேற்றுக் காலை 7.40 மணியளவில் காவல்துறைக்குத் தகவலளித்தது.
காவல்துறை விரைந்து செயல்பட்டு பள்ளி வளாகத்தில் தீவிர சோதனை நடத்தியதாக அமைச்சர் சான் கூறினார். முழுமையான சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் இது பொய்யான மிரட்டல் என்ற முடிவுக்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
பள்ளியில் அப்போது இருந்த மாணவர்களும் ஊழியர்களும் அமைதியான முறையில் அங்கிருந்து வெளியேறியதாகவும் திரு சான் தமது பதிவில் கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளியில் அப்போதிருந்த மாணவர்கள் அனைவரும் வீடு திரும்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பிள்ளைகளை நேற்று பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று, 'பேரண்ட்ஸ் கேட்வே' செயலியின் மூலம் பெற்றோருக்குத் தகவல் அனுப்பப்பட்டது.
மாணவர்களின் நலனை உறுதிசெய்யும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தேவைப்பட்டால் மாணவர்களுக்கு உதவ பள்ளியின் ஆலோசகர்கள் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் சான் சொன்னார்.
"மாணவர்கள், பள்ளி ஊழியர்களின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. பள்ளிகளின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள், மிரட்டல்கள் ஆகியவற்றைக் கல்வி அமைச்சு ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது," என்று அவர் குறிப்பிட்டர்.
பொதுப் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுப்போர்மீது காவல்துறையுடன் இணைந்து கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.

