பாதுகாவல் அதிகாரிகள் தாக்கப்
படும்போது அதுகுறித்து செய்திகள் வெளியாகின்றன. அத்துடன் பொதுமக்களும் அதிருப்திக் குரல் எழுப்புகின்றனர். ஆனால், பாதுகாவல் அதிகாரிகளுக்கான பணி ஒப்பந்தங்களில் இடம்பெறும் நியாய மற்ற உட்கூறுகள் ஒட்டுமொத்த பாதுகாவல் துறைக்குத் தீங்கு விளைவிப்பதாக சிங்கப்பூர் பாதுகாவல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் திரு ராஜ் ஜோஷ்வா தாமஸ் நேற்று தெரிவித்தார்.
"பிறரால் தாக்கப்படுவதைக் காட்டிலும் பணி ஒப்பந்தங்களில் இடம்பெறும் நியாயமற்ற உட்கூறுகள் மோசமானவை. தாக்குதல்கள் அவ்வப்போது நிகழக்கூடியவை. ஆனால் நியாயமற்ற வேலை நிபந்தனைகளால் பாதுகாவல் அதிகாரிகள் படிப்படியாகப் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
சிறப்பாகச் செயல்படும் பாதுகாவல் அதிகாரிகளை அடையாளம் கண்டு அங்கீகரிக்கும் வருடாந்திர விருதளிப்பு விழாவில் அவர் நேற்று கலந்துகொண்டு பேசினார். ஜூலை 24ஆம் தேதியன்று பாதுகாவல் அதிகாரிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
பாதுகாவல் அதிகாரிகளுக்கு வயது வரம்பை விதிப்பது, காரணமின்றி அவர்களை வேலையி
லிருந்து நீக்குவது போன்றவற்றால் அவர்கள் பாதிப்படைவதாக திரு தாமஸ் கூறினார்.
"இத்தகைய ஒப்பந்த உட்கூறுகள் தொடர்பாக பாதுகாவல் சேவை முகவைகளும் பாதுகாவல் சேவையை நாடும் தரப்பும் கலந்துரையாடி இணக்கம் காண்கின்றன. ஆனால் இது பாதுகாவல் அதிகாரிகளை வெகுவாகப் பாதிக்கிறது," என்று திரு தாமஸ் தெரிவித்தார்.
பாதுகாவல் அதிகாரிகளுக்கு வயது வரம்பை விதிக்கும் ஒப்பந்தம் குறித்து சங்கத்தில் புகார் கிடைத்திருப்பதாக திரு தாமஸ் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை அவர் வெளியிடவில்லை. ஆனால் இத்தகைய நியாயமற்ற அணுகுகுறையை அந்நிறுவனம் கடைப்பிடிப்பது இது முதல்முறை அல்ல என்றார் அவர்.
கொண்டோமினியக் குடியிருப்பு களில் பணிபுரியும் பாதுகாவல் அதிகாரிகளுக்கு நியாயமற்ற பணி ஒப்பந்தங்களை செவிலிஸ், நைட் ஃபிராங்க் ஆகிய முகவைகள் வழங்கியது தொடர்பாக சங்கம் இதற்கு முன்பு தெரிவித்திருந்தது.
ஆனால் தற்போது வேறொரு முகவைக்கு எதிராக புகார் செய்யப்பட்டுள்ளதாக நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான திரு தாமஸ் தெரிவித்தார். அதுகுறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
நேற்று நடைபெற்ற விருதளிப்பு விழாவில் 640க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மிகவும் சிறப்பாகச் செயல்பட்ட ஐந்து பாதுகாவல் அதிகாரிகளுக்கு உயர்
விருதுகள் வழங்கப்பட்டன.
இவ்வாண்டுக்கான ஆகச் சிறந்த பாதுகாவல் அதிகாரிகள் விருது திருவாட்டி கீதா நல்லதம்பிக்கும் திரு பரத்குமார் கணபதிக்கும் வழங்கப்பட்டது.
திரு பிரவின் மணிமாறன், திரு சுரேஷ் பெருமாள், திரு நியோ ஆ வாட் ஆகியோருக்கு சங்கத் தலைவரின் நிபுணத்துவப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விருது அளிப்பு விழாவில் மனிதவள, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது கலந்து கொண்டு பேசினார். பாதுகாவல் அதிகாரிகளுக்கும் பாதுகாவல் முகவைகளுக்கும் நியாயமற்ற ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதைச் சுட்டிக் காட்டியதற்கு சங்கத்தை அவர் பாராட்டினார்.
பாதுகாவல் துறைக்கு எப்போதும் ஆள்பலம் தேவை என்பதை அவர் தெரிவித்தார். பாதுகாவல் அதிகாரிகளின் சம்பளம், நலத்திட்டங்கள், உற்பத்தித்திறன் ஆகியவற்றை மேம்மபடுத்த திட்டங்கள் நடப்பில் இருப்பதாக அவர் கூறினார். 2016ஆம் ஆண்டில் பாதுகாவல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட படிப்படியாக உயரும் சம்பள அணுகுமுறை திட்டத்தால் 40,000க்கும் மேற்பட்ட பாதுகாவல் அதிகாரிகள் பலனடைந்திருப்பதை திரு ஸாக்கி சுட்டினார். நிறுவனங்களால் நேரடியாக வேலையில் அமர்த்தப்படும் பாதுகாவல் அதிகாரிகளுக்கும் இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து
விரிவுபடுத்தப்படும்.
"பாதுகாவல் அதிகாரிகள் நமக்குப் பாதுகாப்பு அளிக்கின்றனர். அவர்களது கடப்பாடு, நிபுணத்துவம் ஆகியவற்றை அங்கீகரித்து அவர்களுக்கு ஆதரவு நல்க வேண்டும்," என்று திரு ஸாக்கி
வலியுறுத்தினார்.

