பராமரிப்பாளர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கும் வகையில் இவ்வாண்டின் அதிபர் சவால் நன்கொடை திரட்டின் மூலம் பெறப்படும் தொகை பயன்படுத்தப்படும்.
பராமரிப்பாளர்களுக்கு உதவும் சமூக சேவை அமைப்புகளின் திட்டங்களுக்கு இந்த நிதி வழங்கப்படும்.
திரட்டப்படும் நிதி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும். முதல் 30 விழுக்காடு அடுத்த ஆண்டு ஏப்ரல் 30க்குள் வழங்கப்படும்.
ஏஞ்சியுள்ள 70 விழுக்காடு 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குள் வழங்கப்படும்.
ரிவர் வேலி சாலையில் உள்ள பராமரிப்பாளர்கள் கூட்டணி அமைப்புக்கு நேற்று சென்ற அதிபர் ஹலிமா யாக்கோப், அந்த அமைப்பின் திட்டங்களுடன் தொடர்புடையவர்களிடம் பேசினார்.
பராமரிப்பாளர்களுக்கு சமூகத்தில் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்றும் அவர்களுக்கு கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் அதிபர் ஹலிமா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
"சமூக ஆதரவுக் கட்டமைப்பில் பராமரிப்பு முக்கியமான அம்சம். பொதுவாக, பராமரிக்கப்படுபவர்கள் மீதுதான் நமது கவனம் இருக்கும்.
"ஆனால் தங்கள் அன்புக்
குரியவர்களைப் பராமரிப்பவர்களுக்கு ஆதரவும் உதவியும் தேவை.
"பராமரிப்பாளர்களுக்குச் சரியான மனநிலை, திறன்கள், வளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்தித் தர ஒட்டுமொத்த சமுதாயமும் முயற்சியில் இறங்க வேண்டும். அப்போதுதான் பராமரிப்பாளர்களால் தங்கள் கடமைகளை முறையாகவும் சரியாகவும் நிறைவேற்ற முடியும்," என்று அதிபர் ஹலிமா தெரிவித்தார்.
பராமரிப்பாளர்கள் கூட்டணி அமைப்பு நிறுவப்பட்டதிலிருந்து 7,500க்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்களுக்கு அது ஆதரவு வழங்கியுள்ளது.
மேலும் அதிகமான பராமரிப்பாளர்களுக்கு உதவ அது இலக்கு கொண்டுள்ளது.
நிதியைப் பெற சமூக சேவை அமைப்புகள் இம்மாதம் 25ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் 5 வரை விண்ணப்பிக்கலாம்.

