கோத்தபாயவுக்குக் குறுகிய கால வருகை அனுமதி
கடும் பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டு சீற்றமடைந்திருக்கும் இலங்கை மக்களிடமிருந்து தப்பி சிங்கப்பூர் வந்தடைந்த இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்குக் குறுகிய கால வருகை அனுமதி மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தியது.
பொதுவாக, இலங்கையிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளுக்கு அதிகபட்சம் 30 நாள்கள் வருகை அனுமதி வழங்கப்படும் என்று கூறியது. அதை நீட்டிக்க விரும்புவோர் இணையம் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு விண்ணப்பத்தையும் ஆணையம் தனித் தனியாக ஆராய்ந்து வருகை அனுமதியை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 14ஆம் தேதியன்று கோத்தபாய சிங்கப்பூர் வந்தடைந்தபோது அவருக்கு 14 நாள்கள் வருகை அனுமதி வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியது.
சிங்கப்பூரிடம் கோத்தபாய அடைக்கலம் நாடவில்லை என்றும் சிங்கப்பூர் அவருக்குப் புகலிடம் தரவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு முன்னதாகத் தெரிவித்தது.
மோசடி: தம்பதியர் அடையாளம் வெளியிடப்பட்டது
ஏறத்தாழ $32 மில்லியன் பெறுமானமுள்ள சொகுசுப் பொருள்களை விநியோகம் செய்யாமல் மோசடிக் குற்றம் புரிந்ததாக நம்பப்படும் தம்பதியரின் அடையாளத்தை காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களது இருப்பிடம் தெரிந்தால் தகவல் அளிக்கும்படி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. சொகுசுப் பொருள்கள் மோசடியில் சிங்கப்பூர் ஆடவரான 26 வயது பி ஜியாபெங்கும் தாய்லாந்துப் பெண்ணான 27 வயது பன்சுக் சிரிவிப்பாவும் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இம்மாதம் 4ஆம் தேதியன்று லாரி ஒன்றின் கொள்கலனுக்குள் ஒளிந்து சிங்கப்பூரிலிருந்து அந்த இருவரும் தப்பித்திருக்கக்கூடும் என்று அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்தனர்.
இருவருக்கும் எதிராக அனைத்துலக அளவில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1லிருந்து சுங்கத்துறைக்குப் புதிய தலைவர்
வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் சுங்கத்துறைக்கு காவல்துறையின் துணை ஆணையர் டான் ஹங் ஹூய் தலைமை தாங்குகிறார். சுங்கத்துறைக்குத் தற்போது தலைமை தாங்கும் திரு ஹோ சீ போங்கிற்குப் பதிலாக திரு டான் அப்பதவியை வகிப்பார்.
2014ஆம் ஆண்டிலிருந்து தலைமை இயக்குநராகப் பதவி வகித்த திரு ஹோவின் பதவிக் காலம் நிறைவடைந்ததும் கல்வித் துறையில் மூத்த அதிகாரியாக அவர் நியமிக்கப்படுவார் என நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
சிங்கப்பூர் சுங்கத்துறையில் தொழில்நுட்பப் பயன்பாட்டை 53 வயது திரு ஹோ விரிவுபடுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுங்கத்துறை செயல்முறைகளை மின்னிலக்கமயமாக்கியது, வெளிநாட்டு பங்காளிகளுடனான மின்னிலக்க வர்த்தக இணைப்பை மேம்படுத்தியது போன்றவை திரு ஹோவின் முக்கிய பங்களிப்புகளாகும்.
சுங்கத்துறையின் புதிய தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் 53 வயது திரு டான், 1994ஆம் ஆண்டில் காவல்துறையில் இணைந்தார். கடந்த 28 ஆண்டுகளில் அவர் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஆடவர்
எண்ணெய் வர்த்தக நிறுவனமான வெர்மொண்ட் யுஎம்மும் அதில் பணிபுரியும் பல ஊழியர்களும் ஒன்றிணைந்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி $5 மில்லியனுக்கும் அதிகமான தொகையை பறித்ததாகக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் மூத்த சரக்கு அதிகாரியாகப் பணிபுரிந்த
52 வயது லோ சியோங் சான், மோசடிக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அந்த மோசடி மூலம் அவர் $400,000க்கும் அதிகமான தொகையைப் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
துவாஸ் வெடிப்புச் சம்வவம்: இருவர் மீது குற்றச்சாட்டு
கடந்த ஆண்டு துவாஸ் வட்டாரத்தில் ஸ்டார்ஸ் என்ஜினியரிங்கிற்குச் சொந்தமான பட்டறையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக மூன்று ஊழியர்கள் மாண்டனர். ஏழு பேர் காயமுற்றனர்.
இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர் சுவா சிங் டா, தயாரிப்பு நிர்வாகி லியின் கோ துன் ஆகியோர் மீது நேற்று குற்றம் சுமத்தப்பட்டது.
ஸ்டார்ஸ் என்ஜினியரிங் நிறுவனம் மீது வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ் குற்றச்சாட்டுகள் பதிவாகி உள்ளன.

