டிக்டாக் பயன்படுத்தும் ஒருவர் தனக்கு அண்மையில் ஏற்பட்ட ஓர் அறுவறுப்பான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். தன்னுடைய காதுக்குள் ஒரு கரப்பான்பூச்சி புகுந்து, அதனால் அவர் பட்ட வேதனையைப் பற்றி அவர் விவரித்திருந்தார். இந்தக் காணொளியை 300,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
தான் தூங்கிகொண்டிருந்தபோது, ஒரு கரப்பான்பூச்சி தன்னுடைய காது பக்கம் ஊர்வதுபோன்ற உணர்வு ஏற்ப்பட்டதாக அவர் கூறினார். பூச்சியை ஓங்கி அடித்திருக்கிறார். அது அவர் காதுக்குள் ஓடியது. காதுக்குள் விரலைவிட்டு பூச்சியை எடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை.
காதுக்குள் கரப்பான் நெளிவது தனக்கு கடும் வலியைத் தந்ததாக அவர் குறிப்பிட்டார்.
என்ன செய்வது என்று அறியாமல், வாய் துர்நாற்றத்தைப் போக்க பயன்படுத்தப்படும் 'மவுத்வாஷை' தனது காதுக்குள் ஊற்றியுள்ளார். பூச்சி நெளிவதை நிறுத்தியது. அது மூழ்கிவிட்டது. சிறு இடுக்கிகள் கொண்டு பூச்சியைக் காதிலிருந்து எடுக்க முயற்சி செய்திருக்கிறார். எதிர்பாராத விதமாக பூச்சி இரண்டாக உடைந்தது. சிறு பாகங்களை மட்டுமே தன்னால் காதிலிருந்து வெளியே எடுக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.
வேறு வழியின்றி, டான் டோக் செங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு விரைந்துள்ளார். சில கருவிகளை பயன்படுத்தி காதுக்குள் சிக்கிக்கொண்டிருந்த அனைத்து கரப்பான் பாகங்களையும் மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். வலியில் துடித்துவிட்டதாக அவர் கூறினார்.
ஒரு வழியாக தனக்கு ஏற்பட்ட இந்த பயங்கரமான அனுபவம் ஒரு முடிவுக்கு வந்ததாக அவர் பெருமூச்சிவிட்டார்.

