உலகப் பொருளியல் வளர்ச்சிக்கான தனது முன்னுரைப்பை இந்த மாதம் குறைக்கப்போவதாக அண்மையில் எச்சரித்திருந்த அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்), சிங்கப்பூருக்கான அதன் பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை குறைத்துள்ளது.
சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டு 3.7 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று அனைத்துலகப் பண நிதியம் தனது நாடுகளுக்கான அறிக்கையில் நேற்று கூறியது. சிங்கப்பூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அது தனது அறிக்கையை வெளியிட்டது.
சிங்கப்பூர் பொருளியல் 4 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று நிதியம் கடந்த மே மாதம் முன்னுரைத்திருந்தது.
சிங்கப்பூர் பொருளியல் 2021ல் 7.6 விழுக்காட்டு வளர்ச்சி கண்டது.
ஆனால் இந்த ஆண்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை களால் வர்த்தகம் தொடர்பான துறைகளில் வளர்ச்சி மெதுவாக இருக்கக்கூடும் என்று நிதியம் குறிப்பிட்டது.
அதே வேளையில் தொற்றுப்பரவலால் அதிகம் பாதிக்கப்பட்ட சுற்றுலா, விமானத்துறை, கட்டுமானம், பயனீட்டாளர் சார்ந்த துறைகளில் மீட்சி இப்போதுதான் தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பணவீக்கம் 4.8 விழுக்காடாக இருக்கும் என்ற முன்னுரைப்பை அனைத்துலகப் பண நிதியம் மாற்றவில்லை.
நாட்டின் பொருளியல் மூன் றிலிருந்து ஐந்து விழுக்காட்டுக்கு இடைப்பட்டு அதன் கீழ்நிலையில்தான் இருக்கும் என்று அரசாங்கம் முன்னுரைத்துள்ளது.
பணவீக்கம் ஐந்திலிருந்து ஆறு விழுக்காட்டுக்குள் இருக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் பொருளியல் மீண்டும் திறந்துள்ள நிலையில் இதுவரை தேக்கி வைக்கப்பட்டிருந்த தேவையும், கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடுகளின் தளர்வும் பொருளியல் வளர்ச்சிக்கு உந்து சக்தியாய் இருப்பதாக அனைத்துலகப் பணநிதியம் விளக்கியது.
"கிருமிப்பரவலைக் கட்டுப் படுத்தும் திறன்வாய்ந்த நடவடிக்கைகள், செயல்திறன் மிக்க தடுப்பூசித் திட்டம், உறுதியான கொள்கைகள் ஆகியவை சிங்கப்பூர் பொருளியலின் போற்றத்தக்க வளர்ச்சிக்கு உதவின," என்று நிதியம் கூறியது.

