செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
536ec5f0-0d8a-4f76-84e4-78023a3c9af2
-

சாங்கி விமான நிலையத்தின் முடிவை நிராகரித்த ஜெட்ஸ்டார்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெட்ஸ்டார் விமான நிறுவனம், தனது விமானச் சேவைகளை நான்காம் முனையத்துக்கு மாற்றும் சாங்கி விமான நிலையத்தின் முடிவை நிராகரித்துள்ளது. அது ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் அது பற்றி இணக்கம் ஏற்படாதபோது 'நியாயமில்லாமல்' எடுக்கப்பட்டது என்றும் ஜெட்ஸ்டார் வருணித்தது.

நான்காம் முனையம் செப்டம்பர் 13ஆம் தேதி மீண்டும் திறக்கும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் நேற்று அறிவித்த ஒன்றரை மணிநேரத்தில், தான் "ஏமாற்றம் அடைந்திருப்பதாக" ஜெட்ஸ்டார் அறிக்கை வெளியிட்டது.

தனது நடவடிக்கைகளை ஒன்றாம் முனையத்திலிருந்து நான்காம் முனையத்துக்கு மாற்றும் எண்ணம் இல்லை என்று சாங்கி விமான நிலையக் குழுமத்திடம் தெரிவித்துள்ளதாக அது குறிப்பிட்டது. நான்காவது முனையத்துக்கு மாறுவதால் தனது செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று ஜெட்ஸ்டார் குறிப்பிட்டது.

சிங்டெல் 5ஜி வசதி விரிவு

சிங்டெல் நிறுவனம் இங்குள்ள 95 விழுக்காட்டு வெளியிடங்களில் 5ஜி சமிக்ஞை கட்டமைப்பை நிறுவியுள்ளதாகக் கூறியுள்ளது. அரசாங்கம் முன்வைத்த இலக்குக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே இது முடிக்கப்பட்டது. புதிய 5ஜி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, நாடு முழுவதும் 5ஜி சேவைகளைத் தொடங்கிய முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

சிங்டெல்லின் 5ஜி கட்டமைப்பு 1,300க்கும் அதிகமான வெளியிடங்களில் உள்ளது. 400க்கும் மேற்பட்ட கட்டடங்களிலும் சுரங்க ரயில் பாதைகளிலும் 5ஜி சமிக்ஞையைப் பெற முடியும் என்று நிறுவனம் கூறியது.

5ஜி கட்டமைப்பு பல அதிக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வழிவகுக்கும். அதில் தொடக்கமாக மரினா பே மிதக்கும் மேடையில் நடக்கவுள்ள இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு 5ஜி கட்டமைப்பில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

சுமார் 3,200 பேருக்கு கொவிட்-19 மருந்துகள் வழங்கப்பட்டன

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு வகையான மருத்துவ நிலையங்களில், ஜூலை 10ஆம் தேதி நிலவரப்படி, 3,200க்கும் அதிகமான நோயாளிகளுக்கு பேக்ஸ்லோவிட் அல்லது லாகெவ்ரியோ மருந்துகள் எழுதித் தரப்பட்டுள்ளன.

சாப்பிடக்கூடிய இந்த இரண்டு மருந்துகளும், கொவிட்-19 தொற்றால் மிகவும் நோய்வாய்ப்படுவதைத் தடுப்பதற்காக வழங்கப்படுகின்றன.

இங்குள்ள எல்லா பலதுறை மருந்தகங்களும் 133 பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களும், பேக்ஸ்லோவிட், லாகெவ்ரியோ கிருமி எதிர்ப்பு மருந்துகளை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் நேற்று தெரிவித்தார். நோய் அபாயம் அதிகமுள்ள மற்றும் மருந்தை உண்ண தகுதிபெற்றவராக மருத்துவரால் தீர்மானிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அந்த மருந்துகளை வழங்க அனுமதி உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.