கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொவிட்-19 சூழலில் மூடப்பட்டிருந்த சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையம் செப்டம்பர் 13ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
நான்காவது முனையம் ஆண்டுக்கு 16 மில்லியன் பயணிகளைக் கையாள வல்லது. இதைத் திறப்பதால் விமான நிலையத்தின் செயல்திறன் கூடும் என்று சாங்கி விமான நிலையக் குழுமம் நேற்று கூறியது.
அடுத்த இரண்டு மாதங்களில், விமான நிறுவனங்களுடனும் பல்வேறு விமான நிலையப் பங்காளி களுடனும் சேர்ந்து முனையத்தின் தயார்நிலை குறித்த சோதனைகளை நடத்தப்போவதாக சாங்கி விமான நிலையக் குழுமம் குறிப்பிட்டது.
நான்காம் முனையம் திறக்கும்போது சீராக செயல்படுவதை உறுதிசெய்வது இதன் நோக்கம்.
அத்துடன், 16 விமான நிறுவனங்களின் சேவைகள் கட்டங்கட்டமாக நான்காவது முனையத்துக்கு மாற்றப்படும் என்றும் சாங்கி விமான நிலையக் குழுமம் சொன்னது.
கேத்தே பசிஃபிக், கொரியன் ஏர் ஆகியவை செப்டம்பர் 13ஆம் தேதியிலிருந்து நான்காவது முனையத்தில் செயல்படும். ஏர்ஏஷியா குழுமம் செப்டம்பர் 15ஆம் தேதி நான்காவது முனையத்துக்கு இடம்பெயரும்.
செப்டம்பர் 20ஆம், 22ஆம் தேதிகளில் வேறு சில விமான நிறுவனங்களும் அக்டோபர் 25ஆம் தேதி ஜெட்ஸ்டார் நிறுவனமும் நான்காவது முனையத்துக்கு மாற்றப்படும்.
நான்காவது முனையம் திறப் பதால், விமானப் பயணங்கள் மீட்சி கண்டு வரும் சூழலில் விமான நிறுவனங்களின் வர்த்தக, செயல்பாட்டுத் தேவைகளுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று நிறுவனத்தின் விமான நிலைய நிர்வாகத்தின் துணைத் தலைவர் டான் லாய் டெக் சொன்னார்.
ஆண்டிறுதியில் அதிகமான விமானப் பயணிகளை எதிர்பார்க்கும் நிலையில், ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க, நான்காம் முனையத்தில் உள்ள இயந்திரமயம் உதவும் என்றார் திரு டான்.

